பீர்க்கன்காரணை அருகே காதுகேளாத மாணவர், ரெயிலில் அடிபட்டு பலி காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிக்கு சென்றபோது பரிதாபம்


பீர்க்கன்காரணை அருகே காதுகேளாத மாணவர், ரெயிலில் அடிபட்டு பலி காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிக்கு சென்றபோது பரிதாபம்
x
தினத்தந்தி 3 Oct 2019 11:45 PM GMT (Updated: 3 Oct 2019 5:49 PM GMT)

பீர்க்கன்காரணை அருகே காதுகேளாத மாணவர், ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக இறந்தார். காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிக்கு சென்ற முதல் நாளிலேயே இந்த பரிதாபம் நேர்ந்தது.

தாம்பரம்,

சென்னை தாம்பரத்தை அடுத்த பீர்க்கன்காரணை ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் பிரதீப் (வயது 14). காது கேளாத மாற்றுத்திறனாளி. இவர், தாம்பரம் சானடோரியம் ஜட்ஜ் காலனியில் அரசு ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து நேற்று பள்ளி திறக்கப்பட்டது. மாணவர் பிரதீப், தனது வீட்டில் இருந்து பள்ளி செல்வதற்காக புறப்பட்டு வந்தார். பெருங்களத்தூர் ரெயில் நிலையம் செல்வதற்காக ரெயில் தண்டவாளம் அருகே நடந்து சென்றார்.

பீர்க்கன்காரணை ஏரிக்கரை பஸ் நிறுத்தம் அருகே ரெயில் தண்டவாளத்தை கடந்துசெல்ல முயன்றபோது அந்த வழியாக வந்த மின்சார ரெயிலில் அடிபட்டு அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

அந்த இடத்தில் வளைவு உள்ளதால் ரெயில் வருவதை அவர் கவனிக்கவில்லை. மேலும் காது கேட்காததால் ரெயில் என்ஜின் டிரைவர் ஹாரன் அடித்த சத்தமும் அவருக்கு கேட்கவில்லை என்று கூறப்படுகிறது.

காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளி திறந்த முதல் நாளிலேயே பள்ளிக்கு சென்ற மாற்றுத்திறனாளி மாணவர் ரெயிலில் அடிபட்டு பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி தாம்பரம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story