மழையை எதிர்பார்த்து நிலங்களில் நெல் விதைகளை தூவும் விவசாயிகள்


மழையை எதிர்பார்த்து நிலங்களில் நெல் விதைகளை தூவும் விவசாயிகள்
x
தினத்தந்தி 4 Oct 2019 3:45 AM IST (Updated: 4 Oct 2019 12:54 AM IST)
t-max-icont-min-icon

மழையை எதிர்பார்த்து உச்சிப்புளி அருகே பல கிராமங்களில் விவசாய நிலங்களை உழுது,நெல் விதைகளை தூவும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

பனைக்குளம்,

தமிழகத்தில் இன்னும் ஒரு சில வாரங்களில் பருவமழை தொடங்கவுள்ளது. இந்த நிலையில் மண்டபம் யூனியனுக்குட்பட்ட உச்சிப்புளி அருகே உள்ள சின்னுடையார்வலசை, கடுக்காய்வலசை, நாரையூரணி, மானாங்குடி உள்ளிட்ட பல கிராமங்களில் விவசாய நிலங்களை டிராக்டர் மூலம் உழுது விவசாயிகள் விதை நெல்லை நிலங்களில் தூவும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதுபற்றி சின்னுடையார் வலசை பகுதியை சேந்த விவசாயி நாகு கூறியதாவது:-

பரம்பரையாக எங்கள் குடும்பம் விவசாய தொழில் செய்து வருகிறது. சுமார் 2 ஏக்கருக்கு மேல் விவசாய நிலம் வைத்துள்ளளேன். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயம் செய்த போது விவசாய நிலங்களில் உள்ள நெற்பயிர்களுக்கு மாட்டு சாணம், ஆட்டு சாணம் உள்ளிட்ட பல இயற்கை உரங்களையே இட்டுள்ளே-ாம். இயற்கை உரங்கள் மூலம் விவசாயம் செய்தபோது விவசாயமும் செழிப்பாக இருந்தது. அது போன்று தற்போது கிடையாது.ரசாயன உரங்கள் என்று வந்ததோ அன்று முதலே விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டு விட்டது.

இதனால் விவசாய நிலத்தின் மண்ணின் நிறமே மாறிவிட்டது. ரசாயன உரம் ஒரு புறம், வெப்பநிலை உயர்வு, தட்ப வெட்ப நிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களாலும் விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டு விட்டது. கடந்த சில ஆண்டுகளாக சரிவர மழையும் பெய்யாததால் மாவட்டம் முழுவதுமே விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டு விட்டது. இந்த ஆண்டாவது வட கிழக்கு பருவ மழை கை கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பில் விவசாய நிலங்களை உழுது விதை நெல்லை நிலங்களில் தூவி வருகிறோம். மழை ஓரளவு பெய்யும் பட்சத்தில் நெற்பயிர்கள் நன்றாக வளர்ந்து விடும். தை அல்லது மாசி மாதம் அறுவடை செய்வோம். விவசாயம் என்றும் அழிய கூடாது. இயற்கை உரங்கள் மூலம் விவசாயம் நடைபெறவும், மரங்களை வெட்டாமல் பாதுகாக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து விவசாய நிலங்களை பாதுகாக்க வேண்டும் என்பது தான் ஒட்டு மொத்த விவசாயிகளின் கோரிக்கையாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story