குடிநீர் பிடிக்கும் தகராறில் தொழிலாளி அடித்துக்கொலை - தம்பதி கைது
காரியாபட்டி அருகே குடிநீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கணவன்- மனைவி கைது செய்யப்பட்டனர். அவர்களது மகனை போலீசார் தேடி வருகின்றனர்.
காரியாபட்டி,
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே மல்லாங்கிணறு சூரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது52). இவரது வீட்டின் அருகே வசிப்பவர் சம்பத் குமார்(60). இவர்கள் இருவரது வீட்டு முன்பும் தனித்தனியே குடிநீர் இணைப்பு உள்ளது. இதில் ராஜேந்திரன் வீடு தாழ்வான பகுதியில் இருந்ததால் தண்ணீர் அதிக நேரம் வந்துள்ளது. இதனை அந்த பகுதியை சேர்ந்தவர்களும் பிடித்து வந்துள்ளனர்.
ராஜேந்திரன் வீட்டு குழாயில் தண்ணீர் பிடிக்கும்போது சம்பத்குமார் வீட்டு குழாயில் போதுமான அளவுக்கு தண்ணீர் வருவதில்லை என்று கூறப்படுகிறது. எனவே அவர் ராஜேந்திரனின் வீட்டு குழாயில் கூடுதல் நேரம் தண்ணீர் பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இந்த பிரச்சினையால் இருவருக்கும் இடையே தகராறு இருந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று குடிதண்ணீர் வந்தபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ராஜேந்திரனை, சம்பத்குமார் மற்றும் அவரது மனைவி முத்தம்மாள்(54), அவர்களது மகன் பொன்னுச்சாமி(35) ஆகிய 3 பேரும் சேர்ந்து கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது இதில் ராஜேந்திரன் மயங்கி கீழே விழுந்தார். உடனே 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பரிசோதித்து ராஜேந்திரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை அடுத்து அவரது உடல் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த கொலை குறித்து மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பத்குமார், முத்தம்மாளை கைது செய்தனர். அவர்களது மகன் பொன்னுச்சாமி தலைமறைவாகிவிட்டார். அவரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story