மராட்டிய சட்டசபை தேர்தல் வேட்பு மனுதாக்கல் செய்ய இன்று கடைசி நாள் இதுவரை 2,191 பேர் மனு தாக்கல்


மராட்டிய சட்டசபை தேர்தல் வேட்பு மனுதாக்கல் செய்ய இன்று கடைசி நாள் இதுவரை 2,191 பேர் மனு தாக்கல்
x
தினத்தந்தி 3 Oct 2019 11:15 PM GMT (Updated: 3 Oct 2019 9:44 PM GMT)

மராட்டிய சட்டசபை தேர்தல் வருகிற 21-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலை பா.ஜனதா- சிவசேனா மற்றும் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து சந்திக்கின்றன.

மும்பை, 

மராட்டிய சட்டசபை தேர்தல் வருகிற 21-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலை பா.ஜனதா- சிவசேனா மற்றும் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து சந்திக்கின்றன.

வேட்பாளர் பட்டியல்

இதுதவிர ராஜ்தாக்கரே தலைமையிலான நவநிர்மாண் சேனா, பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாடி மற்றும் ஓவைசி தலைமையிலான எம்.ஐ.எம். கட்சியும் களத்தில் உள்ளன. இதில் வேட்பு மனு தாக்கல் கடந்த 27-ந்தேதி தொடங்கியது. தொடக்க நாட்களில் சுயேச்சை மற்றும் சிறிய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வந்தனர்.

இந்தநிலையில் கடந்த 4 நாட்களாக பா.ஜனதா, சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் பல கட்டங்களாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன.

ஆதித்ய தாக்கரே வேட்புமனு

இதையடுத்து கடந்த 2 நாட்களாக பிரதான கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். பா.ஜனதா மாநிலத்தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் புனேயில் உள்ள கோத்ருட் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

மும்பையில் உள்ள ஒர்லி தொகுதியில் போட்டியிடும் சிவசேனா இளைஞர் அணி தலைவர் ஆதித்ய தாக்கரே தொண்டர்களுடன் பேரணியாக சென்று நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

2 ஆயிரத்து 191 மனுக்கள்

இதுதவிர காங்கிரசில் இருந்து பா.ஜனதாவுக்கு தாவிய முன்னாள் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல் உள்ளிட்ட பல தலைவர்களும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதுதவிர சயான் கோலிவாடாவில் போட்டியிடும் தமிழர் கேப்டன் தமிழ்ச்செல்வன் மற்றும் தாராவி காங்கிரஸ் வேட்பாளர் வர்ஷா கெய்க்வாட் ஆகியோரும் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

நேற்று வரை மாநிலம் முழுவதும் உள்ள 288 தொகுதிகளுக்கு 2 ஆயிரத்து 191 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்து இருந்தனர்.

இன்று கடைசி நாள்

இன்று (வெள்ளிக்கிழமை) வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். முதல்- மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இன்று நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். இதேபோல பங்கஜா முண்டே, முன்னாள் முதல்-மந்திரிகள் அசோக் சவான், பிரதிவிராஜ் சவான், முன்னாள் துணை முதல்-மந்திரி அஜித் பவார் உள்ளிட்டவர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை மறுதினம் (5-ந்தேதி) நடக்கிறது.

7-ந் தேதி வேட்பு மனுக்களை திரும்பபெற கடைசி நாளாகும். அதன் பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

Next Story