புழல் சிறையில் இருந்து இலங்கை வாலிபர்களை விடுவித்த விவகாரம்: மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்க தாமதிப்பது ஏன் மதுரை ஐகோர்ட்டு கேள்வி


புழல் சிறையில் இருந்து இலங்கை வாலிபர்களை விடுவித்த விவகாரம்: மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்க தாமதிப்பது ஏன் மதுரை ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 3 Oct 2019 10:45 PM GMT (Updated: 3 Oct 2019 10:03 PM GMT)

புழல் சிறையில் இருந்து இலங்கை வாலிபர்களை விடுவித்தது தொடர்பாக மத்திய அரசுக்கு தகவல் அனுப்ப தாமதம் செய்வது ஏன்? என்று ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டுவுக்கு, மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.

மதுரை, 

இலங்கையை சேர்ந்தவர்கள் சங்கசிரந்தா (வயது 34), முகமது சப்ராஸ் (33). இவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சட்டவிரோதமாக இந்தியாவுக்கு வந்தனர். இங்கு சுற்றித்திரிந்த அவர்களை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை இலங்கைக்கு அனுப்பி வைக்க உத்தரவிடக்கோரி, மதுரை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு விசாரணையின்போது, “மனுதாரர்கள் ஏற்கனவே சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுவிட்டனர், அவர்கள் இங்கிருந்து இலங்கைக்கு தப்பிவிட்டதாகவும், அவர்களில் ஒருவர் சரண் அடைந்துள்ளதாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவி வருகிறது” என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளதாகவும், இதற்கு அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.

சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட அவர்களை இலங்கை தூதரகத்திடம் ஒப்படைக்காததற்கு கோர்ட்டு கண்டனம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த்வெங்கடேஷ் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு குறித்து மத்திய அரசுக்கு கடிதம் அனுப்ப பரிந்துரைக்கப்பட்டு உள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “இலங்கை வாலிபர்கள் தப்பிய விவகாரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கடந்த 19-ந்தேதி இந்த கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறைக்கு கடிதம் உடனடியாக அனுப்பாமல் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தாமதிப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பினர்.

“தேசிய பாதுகாப்பு தொடர்பான விஷயத்தில் காவல்துறை அலட்சியம் காட்டுகிறது. இந்த விஷயத்தை இந்த கோர்ட்டு அப்படியே விட்டுவிடாது” எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

முடிவில், “இதுகுறித்து பதில் அளிக்க ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருகிற 15-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும். இந்த வழக்கில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும், தமிழக உள்துறையும் எதிர் மனுதாரராக சேர்க்கப்படுகிறார்கள்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story