பிடிபடும் கடத்தல் தங்கம் எங்கே செல்கிறது? மதுரை விமான நிலைய அதிகாரி விளக்கம்


பிடிபடும் கடத்தல் தங்கம் எங்கே செல்கிறது? மதுரை விமான நிலைய அதிகாரி விளக்கம்
x
தினத்தந்தி 3 Oct 2019 10:45 PM GMT (Updated: 3 Oct 2019 10:34 PM GMT)

விமானத்தில் கடத்தி வந்து பிடிபடும் கடத்தல் தங்கம் எங்கே செல்கிறது? என்பதற்கு மதுரை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரி விளக்கம் அளித்தார்.

மதுரை, 

மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூர், டெல்லி, மும்பை போன்ற நகரங்களுக்கும், துபாய், சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வாரத்தின் அனைத்து நாட்களிலும் சிங்கப்பூருக்கு விமானம் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதன் மூலம், 24 மணி நேரமும் இயங்கக்கூடிய விமான நிலையமாக மதுரை விமான நிலையம் மாறியது.

நாளுக்கு நாள் மதுரை விமான நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மக்களின் வருகை அதிகரிப்பது போல், கடத்தல் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.

கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை, தங்க முலாம் பூசி தங்கத்தை கடத்தியது, மைக்ரோவேவ் ஓவன் சாதனத்தில் மறைத்து வைத்து கடத்தியது, மருத்துவ பெல்ட்டில் மறைத்து வைத்து கடத்தியது, கார்பன் பேப்பர் மூலம் கடத்தியது, எமர்ஜென்சி லைட்டில் வைத்து கடத்தியது, அளவிடும் டேப்பில் வைத்து கடத்தியது, செல்போனுக்குள் மறைத்து வைத்து கடத்தியது, கிரைண்டருக்குள் மறைத்து கடத்தியது என சுமார் 25 நூதன கடத்தல்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் கூட ரூ.80 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்க கட்டிகளை மதுரை சுங்க புலனாய்வுத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். இதுதொடர்பாக ஒருவர் கைதும் செய்யப்பட்டுள்ளார்

இந்த கடத்தல் சம்பவங்களை தடுப்பதற்காக மதுரை விமான நிலையத்தில் சுங்கத்துறை, சுங்க புலனாய்வு துறை என்ற இரு துறைகள் செயல்பட்டு வருகின்றன. சுங்கத்துறையில் உதவி கமிஷனர், சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர் உள்பட 15 பேர் ஒரு குழுவாகவும், இதுபோல், சுங்க புலனாய்வு துறையில் உதவி கமிஷனர், சூப்பிரண்டு உள்பட 5 பேர் மற்றொரு குழுவாகவும் கண்காணிப்பு மற்றும் சோதனை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து தற்போது வரை நடைபெற்ற சுமார் 25 கடத்தல் சம்பவங்களின் மூலம் ரூ.10 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பிடிபட்டுள்ளது.

ஆனால் கடத்தல் சம்பவங்களில் பிடிபடும் தங்கம் எங்கே செல்கிறது? என்ற கேள்வி எல்லோரது மனதிலும் எழக்கூடிய ஒன்று தான். இதுகுறித்து சுங்க புலனாய்வுத்துறை உதவி கமிஷனர் வெங்கடேஷ்பாபு கூறும்போது, “கடத்தல்காரர்களிடம் இருந்து எவ்வளவு தங்கம் பிடித்திருக்கிறோம் என்பதை ஆவணங்களாக உயர் அதிகாரிகளுக்கு முதலில் தாக்கல் செய்ய வேண்டும். அதில் தங்கத்தின் எடை, மதிப்பு ஆகியவற்றை குறிப்பிட்டிருக்க வேண்டும். மறுநாளோ அல்லது அன்றைய தினமோ, அந்த தங்கத்தை மதுரையில் உள்ள குடோனுக்கு அனுப்பி விடுவோம். அங்கிருந்து திருச்சியில் உள்ள சுங்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு அந்த தங்கம் சென்று விடும்.

இதுபோன்று தமிழகத்தில் உள்ள பல விமான நிலையங்களில் பிடிபடும் தங்கம் அனைத்தும் தலைமை அலுவலகமான திருச்சிக்கு கொண்டு செல்லப்படும். கடத்தல் தொடர்பான வழக்குகள் நிறைவு பெற்றவுடன் குடோனில் இருக்கும் மொத்த தங்கமும் உரியபாதுகாப்புடன் மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு விமானம் மூலம் எடுத்து செல்லப்படும்.

மாதத்தில் ஒரு முறை அல்லது இரு முறை இதுபோன்று தங்கத்தை எடுத்து செல்வார்கள். தங்கத்தை எடுத்து செல்வதற்கு முன் அந்த தங்கத்திற்கு இன்சூரன்சும் செய்து விடுவோம். பாதுகாப்புடன் அந்த தங்கத்தை ரிசர்வ் வங்கியில் ஒப்படைத்து விட்டு, அதற்குரிய பணத்தை வங்கி நிர்வாகத்தினர், இந்திய அரசின் வங்கி கணக்கிற்கு பணமாக செலுத்துவார்கள். அந்த பணத்தை நாட்டில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கும், செயல்பாடுகளுக்கும் பயன்படுத்துவார்கள்“ என்றார்.

தங்கத்தை பொறுத்தமட்டில், ரூ.20 லட்சம் மதிப்புக்கு குறைவாக கடத்தி வந்தால், அதனை கடத்தி வந்தவர் கைது செய்யப்படுவார். ஆனால், அவர் ஜாமீனில் வெளியே வர முடியும்.

அதுவே ரூ.20 லட்சம் மதிப்புக்கு மேல் உள்ள தங்கத்தை கடத்தி சிக்கிக்கொண்டால் ஜாமீனில் வெளியே வரமுடியாத வகையில், அந்த நபர் சிறை செல்ல நேரிடும். இது போல் போதை பொருட்கள் கடத்தலிலும், கடத்தி வரும் பொருளை பொறுத்து 1 வருடம் முதல் 20 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

ஓராண்டுக்கு மேல் அயல்நாட்டில் தங்கி விட்டு வரும் இந்திய குடியுரிமை பெற்ற ஆண் பயணிகள் 20 கிராம் தங்கத்தையும், பெண்கள் 40 கிராம் தங்கத்தையும் எடுத்து வரலாம். இதுபோல 100 வெளிநாட்டு சிகரெட்டுகள், 2 லிட்டர் வெளிநாட்டு மதுபானங்கள் கொண்டு வரலாம். அதற்கு மேல் கொண்டு வந்தால் அதற்கு வரி செலுத்த வேண்டும்.

இந்திய குடியுரிமை பெற்ற பயணிகள் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களையும், அயல்நாட்டு பயணிகள் 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களையும் சுங்கவரி செலுத்தாமல் எடுத்து வரலாம். அதற்கு மேல் கொண்டு வரப்படும் பொருட்களுக்கு, பொருட்களின் மதிப்பில் 38.5 சதவீதம் வரி வசூலிக்கப்படும். இந்திய குடியுரிமை பெற்ற பயணி ரூ.25 ஆயிரம் மதிப்பிலான இந்திய ரூபாய் நோட்டுகளை மட்டுமே கொண்டு வர அனுமதி உண்டு. வியாபார நோக்கில் திருட்டுத்தனமாக கொண்டுவரப்படும் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு சம்பந்தப்பட்ட நபர் தண்டனைக்கும் உட்படுத்தப்படுவார், எனவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story