கோவை அருகே, தனியார் நூற்பாலையில் பயங்கர தீ விபத்து


கோவை அருகே, தனியார் நூற்பாலையில் பயங்கர தீ விபத்து
x
தினத்தந்தி 4 Oct 2019 10:00 PM GMT (Updated: 4 Oct 2019 4:30 PM GMT)

கோவை அருகே தனியார் நூற்பாலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சு பேல்கள், எந்திரங்கள் எரிந்து நாசமானது.

கிணத்துக்கடவு,

கோவை சாய்பாபா காலனியை சேர்ந்தவர் அனில் மேத்தா (வயது 60). இவருக்கு சொந்தமான நூற்பாலை கோவையை அடுத்த கிணத்துக்கடவு பகுதியில் உள்ளது. இந்த மில்லில் தயாரிக்கப்படும் நூல் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நூற்பாலையில் ஒரு பகுதியில் நூல் தயாரிக்க தேவையான பஞ்சு பேல்களும், மற்றொரு பகுதியில் பஞ்சில் இருந்து தயாரிக்கப்பட்ட நூல் பண்டல்களும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு வழக்கம்போல் தொழிலாளர்கள் எந்திரத்தில் நூல்நூற்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென நூற்பாலையில் இருந்து புகை கிளம்பியது. உடனே அங்கிருந்த சில தொழிலாளர்கள் எந்திரத்தை நிறுத்திவிட்டு வெளியே வந்து பார்த்தனர்.

அப்போது பஞ்சு பேல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பகுதியில் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது. இதனையடுத்து வேலையில் இருந்த அனைத்து தொழிலாளர்களும் வெளியே ஓடிவந்தனர்.

இந்த நிலையில் தீ மள,மளவென அருகில் உள்ள நூல்பண்டல்கள் அடுக்கி வைத்திருந்த பகுதிக்கும், எந்திரங்களுக்கும் பரவியது. உடனே தொழிலாளர்கள் தீ விபத்து குறித்து கிணத்துக்கடவு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அதிகாரி புருஷோத்தமன் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் தீயை முழுமையாக அணைக்க முடியவில்லை. இதனை தொடர்ந்து கோவை, பொள்ளாச்சி, பகுதிகளில் இருந்து தீயணைப்பு நிலைய வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. தொடர்ந்து தீயணைப்பு பணியில் வீரர்கள் ஈடுபட்டனர்.

மேலும் கூடுதலாக தனியார் தண்ணீர் லாரிகளும் வரவழைக்கப்பட்டன. பஞ்சு மற்றும் நூல்பண்டல்கள் அதிகமாக இருந்ததால் தீ மள, மளவென பற்றி எரிந்தது. இதனால் தீயை கட்டுப்படுத்த முடியாமல் வீரர்கள் திணறினர். 10 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.

இருப்பினும் நூற்பாலையில் உள்ள எந்திரங்கள், பஞ்சு பேல்கள், நூல் பண்டல்கள் தீயில் எரிந்து நாசமாயின. இவை பல லட்சம் ரூபாய் மதிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி, சப்-இன்ஸ்பெக்டர் ஜவஹர்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். தீ விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டதா? அல்லது வேறு எதுவும் காரணமாக என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story