உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல், அனைத்து கட்சியினர் முன்னிலையில் கலெக்டர் வெளியிட்டார்


உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல், அனைத்து கட்சியினர் முன்னிலையில் கலெக்டர் வெளியிட்டார்
x
தினத்தந்தி 4 Oct 2019 10:15 PM GMT (Updated: 4 Oct 2019 4:48 PM GMT)

உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை அனைத்து கட்சியினர் முன்னிலையில் கலெக்டர் விஜயலட்சுமி வெளியிட்டார்.

திண்டுக்கல்,

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி அந்தந்த மாவட்டங்களுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்துக்கான இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் கலெக்டர் விஜயலட்சுமி உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியல் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மூலம் முறைப்படி பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்யப்படும். இந்த வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இடம்பெற்றுள்ளதை பொதுமக்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். ஏதேனும் மாறுதல்கள் இருந்தால் தேர்தல் பிரிவு அதிகாரிகளை தொடர்புகொள்ளலாம் என்றார்.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம் வாரியாக பட்டியலில் வெளியிடப்பட்ட வாக்காளர்கள் விவரம் வருமாறு:-

திண்டுக்கல் மாநகராட்சியில் ஆண் வாக்காளர்கள் 83 ஆயிரத்து 863 பேர், பெண் வாக்காளர்கள் 88 ஆயிரத்து 518 பேர், இதர பிரிவினர் 28 பேர் என மொத்தம் 1 லட்சத்து 72 ஆயிரத்து 409 வாக்காளர்கள் உள்ளனர். அதே போல் கொடைக்கானல் நகராட்சியில் 13 ஆயிரத்து 27 ஆண் வாக்காளர்கள், 13 ஆயிரத்து 573 பெண் வாக்காளர்கள், இதர பிரிவினர் 3 என மொத்தம் 26 ஆயிரத்து 603 பேர் உள்ளனர்.

ஒட்டன்சத்திரத்தில் 28 ஆயிரத்து 457 ஆண் வாக்காளர்கள், 30 ஆயிரத்து 698 பெண் வாக்காளர்கள், இதர பிரிவினர் 15 பேர் என மொத்தம் 59 ஆயிரத்து 170 பேர் உள்ளனர். பழனியில் 14 ஆயிரத்து 181 ஆண் வாக்காளர்கள், 15 ஆயிரத்து 19 பெண் வாக்காளர்கள், இதர பிரிவினர் 3 பேர் என மொத்தம் 29 ஆயிரத்து 203 பேர் உள்ளனர்.

அகரம், அம்மையநாயக்கனூர், ஆயக்குடி, பாலசமுத்திரம், வத்தலக்குண்டு, சின்னாளபட்டி, கன்னிவாடி, நிலக்கோட்டை, வடமதுரை, வேடசந்தூர் உள்பட 23 பேரூராட்சிகளில் 1 லட்சத்து 44 ஆயிரத்து 636 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 52 ஆயிரத்து 600 பெண் வாக்காளர்கள், 13 இதர பிரிவினர் என மொத்தம் 2 லட்சத்து 97 ஆயிரத்து 249 பேர் உள்ளனர்.

ஆத்தூர், குஜிலியம்பாறை, நத்தம் உள்பட 14 ஊராட்சி ஒன்றியங்களில் 5 லட்சத்து 94 ஆயிரத்து 26 ஆண் வாக்காளர்கள், 6 லட்சத்து 15 ஆயிரத்து 185 பெண் வாக்காளர்கள், இதர பிரிவினர் 96 பேர் என மொத்தம் 12 லட்சத்து 9 ஆயிரத்து 307 பேர் உள்ளனர்.

இதேபோல் பழனி ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலை ஊராட்சி வாக்குப்பதிவு அலுவலரும், வட்டார வளர்ச்சி அலுவலருமான ஏழுமலையான் வெளியிட்டார். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலகர் நாகராஜன் உடனிருந்தார். பழனி நகராட்சி அலுவலகத்தில், நகராட்சி ஆணையர் நாராயணன் வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். கொடைக்கானல் நகராட்சி அலுவலகத்தில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நகராட்சி ஆணையர் முருகேசன் வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆணையர் ஜெயச்சந்திரன் வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர். இதில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Next Story