தமிழக அரசு சார்பில் திருப்பூர் குமரன் பிறந்தநாள் விழா; அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு


தமிழக அரசு சார்பில் திருப்பூர் குமரன் பிறந்தநாள் விழா; அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 5 Oct 2019 4:45 AM IST (Updated: 4 Oct 2019 10:54 PM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசு சார்பில் திருப்பூரில் குமரன் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

திருப்பூர்,

கொடி காத்த திருப்பூர் குமரனின் 116-வது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் ரெயில் நிலையம் முன்புறம் உள்ள திருப்பூர் குமரன் நினைவு மண்டபம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. நேற்று காலை கொடி காத்த திருப்பூர் குமரன் திருவுருவ சிலைக்கு அரசின் சார்பில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். கலெக்டர் கே.விஜயகார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.

நினைவு மண்டபத்தில் அமைக்கப்பட்டு இருந்த திருப்பூர் குமரனின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் புகைப்படங்களை அமைச்சர் பார்வையிட்டார். இதில் எம்.எல்.ஏ.க்கள் குணசேகரன்(திருப்பூர் தெற்கு), விஜயகுமார்(திருப்பூர் வடக்கு), கரைப்புதூர் நடராஜன்(பல்லடம்), தனியரசு(காங்கேயம்), மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், ஆர்.டி.ஓ. கவிதா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல், மாநகர போலீஸ் துணை கமிஷனர் பிரபாகரன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ஜான் ஜெகத் பிரைட், மாநகர செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி காந்தி, உதவி மக்கள் தொடர்பு அதிகாரிகள் பாலாஜி, சதீஷ்குமார், வடக்கு தாசில்தார் ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் நிருபர்களிடம் கூறும்போது, 2015-ம் ஆண்டு முதல் திருப்பூர் குமரன் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடி வருகிறோம். காந்தியின் கொள்கையை பின்பற்றியவர் திருப்பூர் குமரன். காந்தியை கைது செய்தபோது திருப்பூரில் தடையை மீறி நடைபெற்ற கண்டன ஊர்வலத்தில் பங்கேற்ற திருப்பூர் குமரன் போலீசாரின் தாக்குதலில் பலத்த காயமடைந்தபோதும், கையில் இருந்த கொடியை கீழே விழாமல் மார்போடு சேர்த்து வைத்து வந்தே மாதரம் என்று கூறி தேசப்பற்றை பறைசாற்றினார்.

நாட்டின் விடுதலைக்காக போராடிய திருப்பூர் குமரன் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. திருப்பூர் குமரன் நினைவு மண்டபத்தில் உள்ள படிப்பகம் செயல்படாமல் இருப்பதாக கூறினார்கள். இதுகுறித்து கலெக்டரிடம் தெரிவித்துள்ளேன். இன்று(நேற்று) முதல் படிப்பகம் தொடர்ந்து செயல்படும் என்றார்.

திருப்பூர் சுப்பராயன் எம்.பி. நேற்று குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் டி.கே.டி.மு.நாகராஜன்(தி.மு.க.), கிருஷ்ணன்(காங்கிரஸ்), ரவி(இந்திய கம்யூனிஸ்டு), சிவபாலன்(ம.தி.மு.க.) உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இதுபோல் தமிழ்நாடு சுதந்திர போராட்ட வீரர்கள் சமிதி சார்பில் தலைவர் அழகேந்திரன், பொதுச்செயலாளர் பி.ஆர்.நடராஜன் ஆகியோர் திருப்பூர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். திருப்பூரில் உள்ள பள்ளி மாணவர்கள் ஊர்வலமாக வந்து குமரன் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

திருப்பூர் குமரன் நினைவிடத்தில் உள்ள குமரன் சிலைக்கு கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பல்வேறு அமைப்பினர் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அப்போது திருப்பூர் விஜயாபுரத்தை சந்திரன் என்பவர் காந்தியை போல் வேடமணிந்து வந்திருந்தார். இதுபோல் மற்றொருவர் திருப்பூர் குமரன் போல் தேசியகொடியை ஏந்தியபடி வந்து அனைவரையும் கவர்ந்தார்.

Next Story