உள்ளாட்சி தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல்; கலெக்டர் வெளியிட்டார்


உள்ளாட்சி தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல்; கலெக்டர் வெளியிட்டார்
x
தினத்தந்தி 4 Oct 2019 10:30 PM GMT (Updated: 4 Oct 2019 5:46 PM GMT)

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் உள்ளாட்சி தேர்தலுக்குரிய புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான வீரராகவ ராவ் வெளியிட்டார்.

ராமநாதபுரம்,

கடந்த 26.03.2019 அன்று வெளியிடப்பட்ட சட்டமன்ற தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலின்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் 5,60,491 ஆண் வாக்காளர்கள், 5,61,879 பெண் வாக்காளர்கள் மற்றும் 71 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 11,22,441 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்த வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு மாநில தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குரிய வார்டு வாரியான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல்கள் தயாரிப்பதற்கான பூர்வாங்க பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இப்பணிகள் நிறைவு பெற்றதையடுத்து புகைப்படத்துடன் கூடிய வாக்காகளர் பட்டியல்களை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான வீரராகவ ராவ் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் கேசவதாசன், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ராஜா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் கணேசன் மற்றும் அரசு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த வாக்காளர் பட்டியலின்படி மாவட்டத்தில் உள்ள 11 யூனியன்களில் 4,25,568 ஆண் வாக்காளர்கள், 4,24,367 பெண் வாக்காளர்கள் மற்றும் 38 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 8,49,973 வாக்காளர்கள் உள்ளனர்.

இதேபோல 7 பேரூராட்சிகளில் 37,361 ஆண் வாக்காளர்கள், 37,935 பெண் வாக்காளர்கள் மற்றும் 2 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 75,298 வாக்காளர்கள் உள்ளனர். 4 நகராட்சிகளில் 97,562 ஆண் வாக்காளர்கள், 99,577 பெண் வாக்காளர்கள் மற்றும் 31 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 1,97,170 வாக்காளர்கள் உள்ளனர்.

இவ்வாறு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 5,60,491 ஆண் வாக்காளர்கள், 5,61,879 பெண் வாக்காளர்கள் மற்றும் 71 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 11,22,441 வாக்காளர்கள் உள்ளனர்.

Next Story