விவசாயிகளின் கோரிக்கைபடி பரிகாரம் வழங்கினால் எனக்கு 100 ஏக்கர் நிலத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி கருத்து


விவசாயிகளின் கோரிக்கைபடி பரிகாரம் வழங்கினால் எனக்கு 100 ஏக்கர் நிலத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி கருத்து
x
தினத்தந்தி 4 Oct 2019 10:15 PM GMT (Updated: 4 Oct 2019 7:14 PM GMT)

விவசாயிகளின் கோரிக்கைபடி பரிகாரம் வழங்கினால், எனக்கு 100 ஏக்கர் நிலத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்று துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி கூறியதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு, 

விவசாயிகளின் கோரிக்கைபடி பரிகாரம் வழங்கினால், எனக்கு 100 ஏக்கர் நிலத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்று துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி கூறியதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

விவசாயிகள் கோரிக்கை

முதல்-மந்திரி எடியூரப்பா, துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி ஆகியோர் பெலகாவி மாவட்டத்தில் மழை நிவாரண பணிகளை பார்வையிட்டு வருகிறார்கள். இந்த நிலையில், துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதியை விவசாயிகள் சந்தித்து மழையால் பயிர்கள் சேதம் அடைந்திருப்பதால், அதற்காக ஒரு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதுகுறித்து துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

ரூ.1 கோடி நிவாரணம்

பெலகாவி மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் விவசாய பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் ஒரு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், இதற்காக நிவாரணம் வழங்குவதில் உள்ள விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். விவசாயிகள் கோரிக்கையின்படி நிவாரணம் வழங்க சாத்தியமில்லை. எனக்கு 100 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. மழையால் பயிர்கள் சேதம் அடைந்து நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்காக எனக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்க முடியுமா?.

பாதிக்கப்பட்டு உள்ள விவசாயிகளுக்கு குறிப்பிட்ட அளவு நிவாரணம் வழங்கப்படும். விவசாய பயிர்கள் நஷ்டத்திற்காக மத்திய அரசு வழங்கும் நிவாரணத்துடன் மாநில அரசும் கூடுதலாக நிதி ஒதுக்கி நிவாரணம் வழங்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. பல்லாரி, பாகல்கோட்டை, பெலகாவி உள்ளிட்ட எந்த மாவட்டங்களையும் தற்போது பிரித்து புதிய மாவட்டங்கள் உருவாக்கும் எண்ணம் தற்போது அரசிடம் இல்லை

இவ்வாறு அவர் கூறினார்.

எதிர்ப்பு

இந்த நிலையில், துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதியின் கருத்துக்கு விவசாய சங்க தலைவர்கள், மற்றும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விவசாயிகளை அவமதிக்கும் விதமாக அவர் பேசி இருப்பதாகவும் கூறியுள்ளனர். காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சியின் தலைவர்களும் லட்சுமண் சவதியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Next Story