விஷம் குடித்து கணவன்- மனைவி தற்கொலை; பாசமாக வளர்த்த நாய்க்குட்டியையும் கொன்றனர்


விஷம் குடித்து கணவன்- மனைவி தற்கொலை; பாசமாக வளர்த்த நாய்க்குட்டியையும் கொன்றனர்
x
தினத்தந்தி 4 Oct 2019 11:30 PM GMT (Updated: 4 Oct 2019 8:03 PM GMT)

விஷம் குடித்து கணவன்-மனைவி தற்கொலை செய்துகொண்டார்கள். மேலும் அவர்கள் இறப்பதற்கு முன் பாசமாக வளர்த்த நாய்க்குட்டியையும் கொன்றார்கள்.

அம்மாபேட்டை,

அம்மாபேட்டை அருகே உள்ள நெரிஞ்சிப்பேட்டை ஒடம்பக்காடு பகுதியை சேர்ந்தவர் நாச்சிமுத்து (வயது 70). விவசாயி. இவருடைய மனைவி ஜெயம்மாள் (65). இவர்களுடைய மகன் முனுசாமி. மகள் ராஜேஸ்வரி.

ராஜேஸ்வரி திருமணம் முடிந்து அருகே கோம்பூர் என்ற இடத்தில் கணவருடன் வசித்து வருகிறார். நாச்சிமுத்துவும், ஜெயம்மாளும் மகனுடன் வசித்து வந்தார்கள்.

இந்தநிலையில் கடந்த மாதம் 23-ந் தேதி நாச்சிமுத்துவும், ஜெயம்மாளும் வெளியூர் செல்வதற்காக நெரிஞ்சிப்பேட்டை பஸ் நிறுத்தத்தில் நின்றுகொண்டு இருந்தார்கள். அப்போது முனுசாமி சென்றார். தன்னுடைய பெற்றோர் அக்காள் வீட்டுக்கு செல்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டு சென்றுவிட்டார். இந்தநிலையில் அன்று இரவு அக்காள் ராஜேஸ்வரியை செல்போனில் தொடர்பு கொண்டு அப்பா, அம்மா அங்கே வந்தார்களா? என்று கேட்டார். அதற்கு அவர் இங்கு வரவில்லை என்று கூறியிருக்கிறார். இதைத்தொடர்ந்து பல இடங்களில் இருவரையும் தேடிப்பார்த்தார். ஆனால் அவர்களை கண்டு பிடிக்க முடியவில்லை.

இதைத்தொடர்ந்து பெற்றோரை காணவில்லை. கண்டுபிடித்து தாருங்கள் என்று முனுசாமி கடந்த 1-ந் தேதி அம்மாபேட்டை போலீசில் புகார் அளித்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே பாலமலை வனப்பகுதியில் நாச்சிமுத்துவும், ஜெயம்மாளும் பிணமாக கிடந்தார்கள். உடல்கள் அருகே விஷ பாட்டிலும் கிடந்தது. அதனால் அவர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து கொளத்தூர் போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பாசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார்கள்.

இந்தநிலையில் நாச்சிமுத்துவும், ஜெயம்மாளும் ஒரு நாய்க்குட்டியை பாசமாக வளத்து வந்துள்ளார்கள். அவர்கள் வீட்டை விட்டு வெளியேறும்போது, நாம் வளர்த்த நாய்க்குட்டியை இனி யார் பராமரிக்க போகிறார்கள். அதனால் அதை கொன்று விடலாம் என்று முடிவுக்கு வந்திருந்தார்கள். இதைத்தொடர்ந்து நாய்க்கு சாப்பாட்டில் விஷம் கலந்துவைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்கள். அவர்கள் சென்றபின் விஷம் கலந்த சாப்பாட்டை தின்ற நாய்க்குட்டி இறந்துவிட்டது தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து நாச்சிமுத்துவும்-ஜெயம்மாளும் ஏன் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story