கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை


கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 5 Oct 2019 3:15 AM IST (Updated: 5 Oct 2019 1:52 AM IST)
t-max-icont-min-icon

கோவில் நிலத்தில் கம்பிவேலி அமைக்க பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி, கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

கோவில்பட்டி, 

கோவில்பட்டி அருகே பூசாரிபட்டி கிராமத்தில் ஒரு சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட கோவிலுக்கு சொந்தமாக 26 சென்ட் நிலம் உள்ளது. அந்த நிலத்தை அளவீடு செய்து தர வேண்டும் என்று வலியுறுத்தி அப்பகுதி மக்கள் வருவாய் துறையினரிடம் முறையிட்டனர். தொடர்ந்து நேற்று காலையில் அந்த நிலத்தை வருவாய் துறையினர் அளவீடு செய்தனர். பின்னர் அந்த நிலத்தை சுற்றிலும் எல்லை கற்கள் நடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

அப்போது அங்கு வந்த மற்றொரு சமுதாயத்தினர், அந்த கோவில் நிலமானது புறம்போக்கு நிலம் என்று கூறி, அந்த நிலத்தில் எல்லை கற்கள் நடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த நிலத்தில் எல்லை கற்கள் நடப்படவில்லை.

இதையடுத்து அப்பகுதி மக்கள் தங்களது சமுதாயத்துக்கு சொந்தமான கோவில் நிலத்தில் எல்லை கற்கள் நட்டு, கம்பிவேலி அமைப்பதற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குவதற்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி, மதியம் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள், உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் சூரியகலாவிடம் கோரிக்கை மனு வழங்கி விட்டு, கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

Next Story