பவானியில் பரபரப்பு; போலீஸ் நிலையம் முன் வாலிபர் தீக்குளிப்பு


பவானியில் பரபரப்பு; போலீஸ் நிலையம் முன் வாலிபர் தீக்குளிப்பு
x
தினத்தந்தி 4 Oct 2019 11:15 PM GMT (Updated: 4 Oct 2019 8:26 PM GMT)

பவானி போலீஸ் நிலையம் முன்பு வாலிபர் தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பவானி,

பவானி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் அல்லிமுத்து. அவருடைய மகன் ராஜா (வயது 27). இவர் சொந்தமாக சரக்கு வாகனம் வைத்து ஓட்டி வருகிறார். ராஜா நேற்று மாலை பெட்ரோல் கேனுடன் பவானி போலீஸ் நிலையம் முன்பு வந்து நின்றார். பின்னர் அவர் தான் கையில் வைத்திருந்த கேனை திறந்து பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் அவரது உடல் கருகியது.

வலியால் அலறித்துடித்த அவர் போலீஸ் நிலையத்துக்குள் அங்கும் இங்குமாக ஓடினார். இதைப்பார்த்த அங்கிருந்த ஏட்டு வேலுசாமி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அங்கிருந்த சாக்குப்பையை எடுத்து அவர் ராஜா உடலில் எரிந்த தீயை அணைத்தார். அதன்பின்னர் தனியார் ஆம்புலன்சை வரவழைத்து அதில் ராஜாவை ஏற்றி பவானி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார் அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-

ராஜா கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு புனிதா என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு தர்ஷன் (2) என்ற மகனும், ரட்சிதா (1) என்ற மகளும் உள்ளனர். ராஜாவுக்கு குடிப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதன் காரணமாக ராஜா சரக்கு வேன் ஓட்டும்போது விபத்தில் சிக்கக்கூடும் என்று புனிதாவும் அவருடைய பெற்றோரும் எண்ணினர். எனவே அவரிடம் இருந்து வாகனத்தின் சாவியை வாங்கிக்கொண்டனர். இதனால் ராஜா அவர்களிடம் தொடர்ந்து சாவி கேட்டு வந்துள்ளார். ஆனால் கொடுக்கவில்லை. இதனால் மனம் உடைந்த ராஜா கடந்த 2 மாதங்களில் 3 முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால் உறவினர்கள் அவரை காப்பாற்றிவிட்டனர். இதைத்தொடர்ந்து தற்போது மீண்டும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

பவானி போலீஸ் நிலையம் முன்பு வாலிபர் தீக்குளித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story