தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தஞ்சை,
சென்னை கே.கே.நகர் ராமசாமி சாலையை சேர்ந்தவர் நாராயணன். இவர், சென்னையில் காண்ட்ராக்ட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கடந்த ஆண்டு இறந்து விட்டார். இவர்களது மகன் ரகுவரன் (வயது 30). இவர், சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் படிப்பும், அதன்பிறகு அமெரிக்காவில் உள்ள சிக்காகோ பல்கலைக்கழகத்தில் உயர் கல்வியும் படித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து மாணவர் ரகுவரன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தஞ்சையை அடுத்த திருமலை சமுத்திரத்தில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. பயோ டெக்னாலஜி முதலாம் ஆண்டு சேர்ந்துள்ளார். நேற்று முன்தினம் காலை கல்லூரிக்கு சென்ற மாணவர் ரகுவரன் மதியம் விடுதிக்கு வந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து அவருடன் படித்து வரும் மாணவர்கள், ரகுவரனுக்கு போன் செய்துள்ளனர். நீண்ட நேரமாக ரகுவரன் போனை எடுக்கவில்லை. இதனால் ரகுவரனுடன் ஒரே அறையில் தங்கி இருந்த சீனியர் மாணவர்களுக்கு அவர்கள் தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து அவர்கள் உடனடியாக கல்லூரி விடுதி அறைக்கு வந்து கதவை தட்டி உள்ளனர். கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.
இதனால் சக மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திடமும், காவலாளிகளிடமும் இதுகுறித்து தகவல் தெரிவித்தனர். உடனே கல்லூரி விடுதி காவலாளிகள் அங்கு வந்து அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது விடுதி அறையில் ரகுவரன் நைலான் கயிற்றால் மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினார்.
கல்லூரிக்கு சென்றபோது அணிந்து இருந்த ஆடைகளுடனும், கல்லூரி ஐ.டி. கார்டு கழுத்தில் அணிந்திருந்த நிலையிலும் ரகுவரன் தூக்குப்போட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து கல்லூரி நிர்வாகம் வல்லம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ரகுவரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து அறிந்த வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு சீதாராமன் மாணவரின் உடலை பார்வையிட்டு அவரது இறப்பு குறித்து விசாரணை நடத்தினார். தற்கொலை செய்து கொண்ட மாணவர் ரகுவரனின் தந்தை நாராயணன், சகோதரர் மற்றும் சகோதரி ஆகியோர் நேற்று காலை சென்னையில் இருந்து தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்து பிணவறையில் வைத்திருந்த ரகுவரனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
கல்லூரி விடுதியில் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக கல்லூரி விடுதி வார்டன் கொடுத்த புகாரின் பேரில் வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரகுவரன் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story