மங்கநல்லூரில் மக்கள் தொடர்பு முகாம்: 75 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் வழங்கினார்


மங்கநல்லூரில் மக்கள் தொடர்பு முகாம்: 75 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 5 Oct 2019 4:15 AM IST (Updated: 5 Oct 2019 3:09 AM IST)
t-max-icont-min-icon

மங்கநல்லூரில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் 75 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை நாகை கலெக்டர் பிரவீன் நாயர் வழங்கினார்.

குத்தாலம், 

குத்தாலம் தாலுகா மங்கநல்லூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. முகாமிற்கு நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர் தலைமை தாங்கினார்.

முகாமில் தோட்டக்கலைத்துறை, சுகாதாரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் உள்ளிட்ட துறைகளின் சார்பில் சிறுகண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு, அரசின் திட்டங்கள் குறித்தும், அதனை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் விளக்கம் அளித்தனர்.

முகாமில் கலெக்டர் பிரவீன் நாயர் பேசும்போது கூறியதாவது:-

தமிழக அரசானது கருவில் இருந்து கல்லறை வரை பல நல்ல திட்டங்களையெல்லாம் நிறைவேற்றி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் செயல்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், கருவிலிருக்கும் தாய்மார்களுக்கு மகப்பேறு நிதி உதவித்தொகை, குழந்தை பிறந்தபின் ‘‘அம்மா’’ குழந்தைகள் நல பரிசுப்பெட்டகம், அக்குழந்தைகள் கல்வி கற்க செல்லும் போது விலையில்லா பொருட்கள் போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

மேல்நிலை கல்விக்கு பிறகு உயர்க்கல்விக்கு செல்லும் விகிதம் 43 சதவீதமாக உள்ளது. இந்த விகிதம் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகமாக உள்ளது. உயர்க்கல்வி செல்லும் பெண்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சமூக பொருளாதார வளர்ச்சிக்கு பெண்கள் கல்வி கற்பது அவசியமாகும்.

எனவே அனைவரும் பெண் குழந்தைகளை உயர்க்கல்வி வரை படிக்க வைக்க வேண்டும். ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். முகாமில் பெறப்பட்டுள்ள 126 மனுக்கள் உரிய அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முகாமில் 75 பயனாளிகளுக்கு சுமார் ரூ.2 லட்சத்து 66 ஆயிரத்து 154 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

இதில் மயிலாடுதுறை உதவி கலெக்டர் கண்மணி, தனி துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ராஜன், தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் தமிழரசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் குத்தாலம் தாசில்தார் ஹரிதரன் நன்றி கூறினார்.

Next Story