நாகையில் உணவு பாதுகாப்பு துறையின் மேம்பாட்டு குழு கூட்டம் கலெக்டர் பிரவீன் பி.நாயர் தலைமையில் நடந்தது


நாகையில் உணவு பாதுகாப்பு துறையின் மேம்பாட்டு குழு கூட்டம் கலெக்டர் பிரவீன் பி.நாயர் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 6 Oct 2019 4:15 AM IST (Updated: 5 Oct 2019 10:45 PM IST)
t-max-icont-min-icon

நாகையில் உணவு பாதுகாப்பு துறையின் மேம்பாட்டு குழு கூட்டம் கலெக்டர் பிரவீன் பி.நாயர் தலைமையில் நடைபெற்றது.

நாகப்பட்டினம்,

நாகை கலெக்டர் அலுவலகத்தில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் மாவட்ட அளவிலான மேம்பாட்டு குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரவீன் பி.நாயர் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி முன்னிலை வகித்தார்.

பின்னர் கலெக்டர் பிரவீன் பி.நாயர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

உணவு வணிகர்கள் அனைவரும் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தின் படி பதிவு உரிமம் பெற்று மாவட்டத்தில் 100 சதவீதம் இலக்கு அடைவதற்கு வர்த்தக சங்கங்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அனைத்து உரிமம் பெற்ற உணவகங்களும் (FOSTAC Training / Hygiene Rating) பயிற்சி பெற்று சான்று பெற வேண்டும்.

பொட்டலமிட வேண்டும்

போலி அயோடின் இல்லாத உப்பு பாக்கெட்டுகள் விற்கப்படுகிறதா? என கடைகளில் ஆய்வு மேற்கொண்டு, அவ்வாறு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அவற்றை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். உணவு உப்பு உற்பத்தியாளர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று பொட்டலமிட வேண்டும். உணவு பாதுகாப்பு அலுவலர்கள், உப்பளங்களில் ஆய்வு செய்து போலி முகவரியிட்ட உப்பு பாக்கெட்டுகளை கண்டறிந்து பறிமுதல் செய்து, உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புகார்கள்

பொதுமக்களின் அன்றாட பயன்பாட்டிற்காக வினியோகிக்கப்படும் பாலின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அனைத்து உணவு தயாரிப்பு கூடங்கள் மற்றும் உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டு உணவு தரத்தை உறுதி செய்யவும், மேம்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் தாங்கள் வாங்கும் பொருட்களின் தர குறைபாடு மற்றும் கலப்படம் போன்ற உணவு பாதுகாப்பு தொடர்பாக நுகர்வோர் அமைப்புக்கு புகார்கள் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் வரலட்சுமி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு உறுப்பினர்கள், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story