மத்திய அரசு கூடுதலாக வெள்ள நிவாரணம் வழங்கும் பாதிக்கப்பட்ட மக்கள் ஆதங்கப்பட வேண்டாம் முதல்-மந்திரி எடியூரப்பா வேண்டுகோள்


மத்திய அரசு கூடுதலாக வெள்ள நிவாரணம் வழங்கும் பாதிக்கப்பட்ட மக்கள் ஆதங்கப்பட வேண்டாம் முதல்-மந்திரி எடியூரப்பா வேண்டுகோள்
x
தினத்தந்தி 5 Oct 2019 11:15 PM GMT (Updated: 5 Oct 2019 6:56 PM GMT)

கர்நாடகத்துக்கு மத்திய அரசு கூடுதல் வெள்ள நிவாரணம் வழங்கும் என்றும், பாதிக்கப்பட்ட மக்கள் ஆதங்கப்பட வேண்டாம் என்றும் முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு, 

கர்நாடகத்துக்கு மத்திய அரசு கூடுதல் வெள்ள நிவாரணம் வழங்கும் என்றும், பாதிக்கப்பட்ட மக்கள் ஆதங்கப்பட வேண்டாம் என்றும் முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

சமர்ப்பண பூஜை

கர்நாடகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் முதல்-மந்திரி எடியூரப்பா சுற்றுப்பயணம் மேற்கொண்டு நிவாரண பணிகளை பார்வையிட்டு வருகிறார். நேற்று முன்தினம் அவர் பெலகாவி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இந்த நிலையில் நேற்று காலையில் விஜயாப்புரா மாவட்டத்திற்கு எடியூரப்பா சென்றார். அங்குள்ள அலமட்டி அணை நிரம்பி உள்ளதை தொடர்ந்து முதல்-மந்திரி எடியூரப்பா சமர்ப்பண பூஜை நடத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

ஆதங்கப்பட வேண்டாம்

மாநிலத்தில் வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு ரூ.1,200 கோடி நிதி உதவி வழங்கியுள்ளது. இது இடைக்கால நிதி தான். இனிவரும் நாட்களில் கர்நாடகத்திற்கு மத்திய அரசு கூடுதலாக வெள்ள நிவாரண நிதி வழங்கும். இதனால் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ள மக்கள் ஆதங்கப்பட வேண்டாம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து கொடுக்கப்படும். மழை, வெள்ளத்தால் மாநிலத்திற்கு ரூ.38 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. இதுதொடர்பாக நமது அதிகாரிகள் மத்திய அரசுக்கு அறிக்கை அளித்திருந்தனர். அதுபோல, மத்திய குழுவினர் மழை பாதிப்புகள் குறித்து நேரில் ஆய்வு நடத்தி மத்திய அரசிடம் அறிக்கை அளித்திருந்தனர்.

மாநில அரசு தாக்கல் செய்திருந்த அறிக்கைக்கும், மத்திய குழு அளித்திருந்த அறிக்கைக்கும் சில வேறுபாடுகள் இருந்தது. இதையடுத்து, மழை, வெள்ளத்தால் ரூ.34 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக மற்றொரு அறிக்கையை மத்திய அரசிடம், நமது அதிகாரிகள் வழங்குவார்கள். மத்திய அரசிடம் இருந்து நமது மாநிலத்திற்கு எல்லா விதமான உதவிகள் மற்றும் நிதி கிடைக்கும். கூட்டணி அரசு கவிழ்ந்து முதல்-மந்திரி பதவியை இழந்ததால் குமாரசாமி தனது வாய்க்கு வந்ததை பேசுகிறார். அவரது குற்றச்சாட்டை பெரிதுப்படுத்த விரும்பவில்லை.

ரூ.20 கோடி ஒதுக்க முடிவு

விஜயாப்புரா மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளிலும் தண்ணீர் நிரப்பும் பணியை நிறுத்த கூடாது என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அதற்கு தேவையான நிதி உதவிகளை வழங்க அரசு தயாராக உள்ளது. விஜயாப்புராவுக்கு அடுத்த முறை நான் வருவதற்குள் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளிலும் தண்ணீர் நிரப்பப்படும். அலமட்டி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும்போது, பக்கத்தில் உள்ள கிராம மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த கிராம மக்களை வேறு இடத்திற்கு மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.20 கோடியை அரசு ஒதுக்கி முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

மழை, வெள்ளம் வரும் போதும், அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும் போதும் அந்த கிராம மக்கள் பாதிக்கப்படுவதால், அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் விதமாக, வேறு இடத்தில் அந்த கிராம மக்களை குடியேற்றுவதற்கு மாநில அரசு தீர்மானித்திருக்கிறது. மராட்டிய மாநில சட்டசபை தேர்தல் முடிந்த பின்பு அலமட்டி அணையின் உயரத்தை உயர்த்துவது குறித்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மனு கொடுக்கப்படும்.

புதிய மாவட்டங்கள்...

கர்நாடகத்திற்கு மத்திய அரசு நிவாரணம் வழங்க காலதாமதம் செய்வதாகவும், கர்நாடகத்தை பிரதமர் நரேந்திர மோடி புறக்கணிப்பதாகவும், காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் தலைவர்கள் குற்றச்சாட்டு கூறி வந்தனர். ஆனால் பிரதமர் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு இருந்ததால் மாநிலத்திற்கு நிவாரணம் வழங்குவதில் காலதாமதம் ஆவதாக அடிக்கடி கூறி வந்தேன். அதன்படி, பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்து நாடு திரும்பிய 2, 3 நாட்களில் ரூ.1,200 கோடி இடைக்கால நிவாரணத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது.

வெள்ள பாதிப்புகளை மேற்கொள்ள ஏற்கனவே மாவட்ட கலெக்டர்கள், தாசில்தார்களின் வங்கி கணக்குகளில் மாநில அரசு நிதி செலுத்தி உள்ளது. அதனுடன் மத்திய அரசு வழங்கியுள்ள இடைக்கால நிதியும் கலெக்டர்கள், தாசில்தார்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும். அதன்மூலம் எந்த விதமான பிரச்சினை இன்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்து கொடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மாநிலத்தில் விஜயாப்புரா, பல்லாரி உள்பட எந்த ஒரு மாவட்டத்தையும் பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை.

இவ்வாறு முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.

பேட்டியின் போது துணை முதல்-மந்திரி கோவிந்த கார்ஜோள், மந்திரி சி.சி.பட்டீல் உடன் இருந்தார்கள்.

Next Story