கன்னட ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கிசுகிசுவில் சிக்கியவர்கள் பாடகியிடம் காதலை வெளிப்படுத்தி மோதிரம் அணிவித்த இசையமைப்பாளர்


கன்னட ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கிசுகிசுவில் சிக்கியவர்கள் பாடகியிடம் காதலை வெளிப்படுத்தி மோதிரம் அணிவித்த இசையமைப்பாளர்
x
தினத்தந்தி 5 Oct 2019 11:30 PM GMT (Updated: 5 Oct 2019 5:28 PM GMT)

மைசூரு இளைஞர் தசரா விழாவில் பாடகி நிவேதிதா கவுடாவிடம் காதலை வெளிப்படுத்தியதுடன் அவருக்கு இசையமைப்பாளர் சந்தன் ஷெட்டி மோதிரம் அணிவித்த ருசிகர சம்பவம் அரங்கேறியது.

பெங்களூரு, 

மைசூரு இளைஞர் தசரா விழாவில் பாடகி நிவேதிதா கவுடாவிடம் காதலை வெளிப்படுத்தியதுடன் அவருக்கு இசையமைப்பாளர் சந்தன் ஷெட்டி மோதிரம் அணிவித்த ருசிகர சம்பவம் அரங்கேறியது. இவர்கள் இருவரும் கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிசுகிசுவில் சிக்கியவர்கள் ஆவர்.

இந்த சம்பவத்துக்கு சமூகவலைத்தளங்களில் வாழ்த்தும், எதிர்ப்பும் குவிந்த வண்ணம் உள்ளது.

இளைஞர் தசரா விழா

கன்னட திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் சந்தன் ஷெட்டி. பெங்களூரு நாகரபாவியில் வசித்து வரும் இவரது சொந்த ஊர் ஹாசன் மாவட்டம் சாந்திகிராமம் ஆகும். அதுபோல் பிரபல கன்னட பின்னணி பாடகியாக இருப்பவர், நிவேதிதா கவுடா. இந்த நிலையில் கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் சந்தன் ஷெட்டியும், நிவேதிதா கவுடாவும் கலந்துகொண்டனர். அப்போது இருவருக்கும் இடையேயும் காதல் மலர்ந்திருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இதற்கு இருவரும் எந்த கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்தனர்.

இந்த நிலையில் மைசூரு தசரா விழாவையொட்டி மைசூரு அரண்மனை மைதானத்தில் நேற்று முன்தினம் இளைஞர் தசரா விழா நடந்தது. இதில் சந்தன்ஷெட்டியும், நிவேதிதா கவுடாவும் கலந்துகொண்டு கோம்பே... கோம்பே என்ற கன்னட பாடலை பாடினர். சந்தன் ஷெட்டியுடன் நடனக்குழுவினரும் நடனமாடினர். இந்த பாடல் முடிந்ததும் சந்தன்ஷெட்டி பேசுகையில், நான் நிவேதிதா கவுடாவிடம் ஒன்று சொல்ல திட்டமிட்டுள்ளேன். அதுவும் இந்த அழகான அரண்மனை மற்றும் வெளிநாட்டினர், கர்நாடக மக்கள் முன்னிலையில் கூற உள்ளேன். இது மிகப்பெரிய மேடை. இங்கு எனது பெற்றோரும், நிவேதிதாவின் பெற்றோரும் வந்துள்ளனர். நானும், நிவேதிதாவும் பிக்பாஸ் இல்லத்தில் 105 நாட்கள் ஒன்றாக இருந்தோம். அந்த நாட்களில் நாங்கள் இருவரும் அதிகமாக பேசிக்கொண்டோம். என்னை அவர் அதிகமாக புரிந்துகொண்டார்.

காதலை கூறி மோதிரம் அணிவித்தார்

இவ்வாறு அவர் பேசிக்கொண்டு இருக்கும்போதே திடீரென்று சந்தன்ஷெட்டி, நீங்கள் எனக்கு நிச்சயம் ஒரு தாயாக இருப்பீர்கள் என்று தனது காதலை வெளிப்படுத்தி திருமணம் செய்வதாக கூறியதுடன், தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்த சிறிய நகைப்பெட்டியை எடுத்து, அதில் இருந்த மோதிரத்தை நிவேதிதாவின் கையில் அணிவித்துவிட்டார். அவரும் புன்னகை ததும்ப காதலை ஏற்றுக்கொண்டார். இந்த சுவாரசிய நிகழ்வு அங்கு கூடியிருந்தவர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் எதிர்பார்க்காத அதிர்ச்சி வைத்தியம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து நிவேதிதாவின் பெற்றோர் கூறுகையில், ‘இது நிச்சயதார்த்தம் என எடுத்துக்கொள்ள முடியாது. இது எங்களுக்கு ஆச்சரியம் அளிக்கிறது. இதுபற்றி எங்களுக்கு முன்னதாக எதுவும் தெரியாது. எதிர்பாராதவிதமாக இது நடந்துள்ளது. சந்தன் ஷெட்டியின் பெற்றோரை ஒரு முறை சந்தித்து பேசினோம். ஆனால் எங்களுக்கு அவர்கள் காதலிக்கிறார்களா என்பது தெரியவில்லை‘ என்றனர்.

எதிர்ப்பும்... வாழ்த்துக்களும்...

உலகப்புகழ்பெற்ற தசரா விழாவை களங்கப்படுத்தும் வகையில் இசையமைப்பாளர் சந்தன்ஷெட்டியும், பாடகி நிவேதிதாவும் நடந்து கொண்டதாக சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

இது ஒரு புறம் இருக்க. மறுபுறம் சந்தன் ஷெட்டி, நிவேதிதா ஆகியோருக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது. மேலும் இந்த சம்பவத்தை கண்டித்து பெங்களூருவில் உள்ள மைசூரு வங்கி சர்க்கிளில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

2020-ம் ஆண்டு திருமணம்

இதற்கிடையே இதுகுறித்து சந்தன் ஷெட்டி நிருபர்களிடம் கூறுகையில், தசரா விழாவுக்கு ஏதாவது தவறு நடந்திருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இது ஒரு காதல் விவகாரம். அன்பை வெளிப்படுத்த அது நல்ல நாள். ஏனெனில் அந்த நிகழ்ச்சியில் எனது குடும்பத்தினரும், நிவேதிதாவின் குடும்பத்தினரும் மற்றும் எங்கள் நல விரும்பிகளும் கலந்துகொண்டனர். அவர்களுக்கு ஒரு அதிர்ச்சிவைத்தியம் கொடுப்பதற்காக, இளைஞர் தசரா விழா மேடையில் நான் எனது காதலை வெளிப்படுத்தினேன். ஏற்கனவே எங்கள் இருவரை பற்றியும் ஊடகங்களில் பலவாறாக வதந்திகள் வந்தன. அதற்கு முற்றுப்புள்ளிவைக்கும் விதமாக அந்த நிகழ்வு நடந்தது. நாங்கள் நீண்ட காலம் காத்திருக்கப்போவதில்லை. வருகிற 2020-ம் ஆண்டு இறுதிக்குள் திருமணம் செய்து கொள்வோம் என்றார்.

மேடையில் திருமணம் நடந்திருந்தால்...

சம்பவம் பற்றி பாடகி நிவேதிதா கவுடா கூறுகையில், தசரா விழாவில் நாங்கள் தவறாக நடக்கவில்லை. ஒரு வேளை அந்த மேடையில் எங்களுக்கு திருமணம் நடந்திருந்தால் அது தவறு என ஒப்புக்கொண்டிருப்பேன். சந்தன்ஷெட்டி என்னிடம் மேடையில் காதலை வெளிப்படுத்துவார் என்பது தெரியாது. அவர் மோதிரம் மாட்டிவிட்ட போது இது நிஜமா அல்லது கற்பனையா என ஒரு நிமிடம் ஒன்றும் புரியாமல் நின்றுவிட்டேன். அவர் எனக்கு மோதிரம் மாட்டிவிட்ட போது அவரது கை நடுங்கியதை உணர்ந்தேன் என்றார்.

தற்போதும் சர்ச்சையில் சிக்கி இருக்கும் சந்தன்ஷெட்டி பல்வேறு பாடல்களை எழுதி பாடி ஆல்பம் வெளியிட்டுள்ளார். அவ்வாறு அவர் சிவபெருமான் பற்றியும், கஞ்சா பயன்படுத்துவது பற்றியும் ஒரு ஆல்பத்தில் பாடல் எழுதி பாடியிருந்தார். இது சர்ச்சை ஏற்படுத்தியதால் அவருக்கு பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Next Story