ஆயுதபூஜையை முன்னிட்டு ஏ.டி.எம். எந்திரத்தை தண்ணீர் ஊற்றி கழுவிய காவலாளி; பழுது ஏற்பட்டதால் வாடிக்கையாளர்கள் அவதி


ஆயுதபூஜையை முன்னிட்டு ஏ.டி.எம். எந்திரத்தை தண்ணீர் ஊற்றி கழுவிய காவலாளி; பழுது ஏற்பட்டதால் வாடிக்கையாளர்கள் அவதி
x
தினத்தந்தி 5 Oct 2019 11:15 PM GMT (Updated: 5 Oct 2019 9:33 PM GMT)

குன்னத்தூரில் ஆயுதபூஜையை முன்னிட்டு தண்ணீர் ஊற்றி ஏ.டி.எம். எந்திரத்தை காவலாளி கழுவியதால் பழுது ஏற்பட்டது. இதனால் வாடிக்கையாளர்கள் அவதியடைந்தனர்.

குன்னத்தூர்,

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பெருந்துறை ரோட்டில் தனியார் வங்கி செயல்படுகிறது. அந்த வங்கியின் ஏ.டி.எம். மையம் அருகே செயல்படுகிறது. ஏ.டி.எம் மையத்திற்கு பகல், இரவு நேரத்தில் 2 காவலாளிகள் பணியாற்றி வருகிறார்கள். நாளை ஆயுதபூஜை என்பதால் நேற்று பகலில் அருகில் உள்ள கடைக்காரர்கள் தங்கள் கடைகளில் உள்ள பொருட்களை துடைத்து கடையை சுத்தம் செய்து தங்கள் இருசக்கர வாகனங்களை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தனர்.

இதை பார்த்துக்கொண்டிருந்த ஏ.டி.எம். மைய காவலாளி ஆர்வத்துடன் துணியை தண்ணீரில் நனைத்து ஏ.டி.எம். மையத்தின் தரையை துடைத்தார். அப்போது ஒரு வாடிக்கையாளர் ஏ.டி.எம்.மில் பணம் எடுக்கச்சென்றுள்ளார். அங்கிருந்த காவலாளியோ, சிறிது நேரம் காத்திருங்கள் என சொல்லி விட்டு தண்ணீரை எடுத்து ஏ.டி.எம். எந்திரத்தின் மேல் ஊற்றி கழுவியதோடு துணியால் துடைத்து விட்டு வாடிக்கையாளரை அழைத்து பணம் எடுக்கச்சொல்னார்.

வாடிக்கையாளர் பணம் எடுக்க முயன்ற போது ஏ.டி.எம். எந்திரம் செயல்படவில்லை. தண்ணீர் ஊற்றி கழுவியதால் ஏ.டி.எம். எந்திரம் பழுதானது தெரியவந் தது. வங்கி 4 நாட்களுக்கு விடுமுறை. இதனால் ஏ.டி.எம். மையத்துக்கு கூட்டம் அதிகமாக வரும். இந்த நேரத்தில் ஏ.டி.எம். எந்திரம் பழுதடைந்ததால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றமடைந்தனர். பணம் எடுக்க முடியாமல் அவதியடைந்தனர்.

இதுகுறித்து வங்கி மேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக மேல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததால் 3 ஊழியர்கள் வந்து நேற்று இரவு விடிய, விடிய ஏ.டி.எம். எந்திரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆயுதபூஜை கொண்டாடுவதற்காக காவலாளி ஏ.டி.எம். எந்திரத்தை தண்ணீர் ஊற்றி கழுவியதால் பழுது ஏற்பட்ட சம்பவம் குன்னத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story