லட்சுமி நரசிம்மர் கோவிலில் பிரகாரம் சுற்ற முடியாமல் இரும்பு தடுப்புகள் அமைப்பு - பக்தர்கள் அவதி


லட்சுமி நரசிம்மர் கோவிலில் பிரகாரம் சுற்ற முடியாமல் இரும்பு தடுப்புகள் அமைப்பு - பக்தர்கள் அவதி
x
தினத்தந்தி 5 Oct 2019 10:00 PM GMT (Updated: 5 Oct 2019 10:07 PM GMT)

கண்ணமங்கலம் அருகே லட்சுமி நரசிம்மர் கோவிலில் பிரகாரம் சுற்ற முடியாமல் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் பக்தர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

கண்ணமங்கலம்,

கண்ணமங்கலம் அருகே உள்ள சிங்கிரி கோவில் கிராமத்தில் நாகநதி ஆற்றின் வடகரையில் லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. சம்புவராய மன்னர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இந்த கோவிலில் மூலவராக நரசிம்மர் தனது வலது தொடையில் லட்சுமி தேவியை அமரவைத்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

இந்த கோவில் தொல்லியல் துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும், கோவிலை பரம்பரை அறங்காவலர் நிர்வாகம் செய்து வருகிறது. கோவிலுக்கு சனிக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

கோவிலுக்கு வரும் பக்தர்கள், கோவில் வலம் வந்து பிரகாரம் சுற்ற முடியாமல் தவிக்கின்றனர். ஏனெனில் இங்கு பக்தர்கள் நுழையும் தெற்கு வாயிலில் இருந்து நேரடியாக கியூ வரிசையில் நின்று கோவிலை சுற்றி வந்து சாமி தரிசனம் செய்தபின், ராஜகோபுரம் வழியாக வெளியே செல்வது போன்று இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

பொதுவாக கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் பிரகார வலம் வருவது வழக்கம். இதை மாற்றும் வகையில் பக்தர்களுக்கு இடையூறாக கோவில் சார்பில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து கோவில் பட்டாச்சாரியார் ஒருவரிடம் கேட்ட போது, பக்தர்கள் கோவிலை 3 முறை பிரகார வலம் வருவது வழக்கம். ஆனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிலர் கோவிலை 108 முறை அல்லது தங்கள் விருப்பப்படி வலம் வருகின்றனர். இதனால் கோவிலில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.

இதை தவிர்க்கவே, கோவிலுக்கு வரும் பக்தர்கள் இரும்பு தடுப்புகள் வழியாக வரிசையில் சென்று கோவிலை சுற்றி சாமி தரிசனம் செய்யும்படி அமைத்துள்ளோம். பின்னர் ராஜகோபுரம் வழியாக வெளியே செல்வது போல செய்துள்ளோம் என்றார்.

கோவில் ஆகம விதிகள்படி பட்டாச்சாரியார்கள் செயல்படுகிறார்களா? என்பதை தொல்லியல் துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story