மராட்டியத்தில் தேர்தல் நடத்தை விதி அமல் ரூ.43¾ கோடி தங்கம், பணம், மதுபானம் பறிமுதல் தேர்தல் அதிகாரி தகவல்


மராட்டியத்தில் தேர்தல் நடத்தை விதி அமல் ரூ.43¾ கோடி தங்கம், பணம், மதுபானம் பறிமுதல் தேர்தல் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 5 Oct 2019 10:38 PM GMT (Updated: 5 Oct 2019 10:38 PM GMT)

மராட்டியத்தில் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்தநாள் முதல் ரூ.43¾ கோடி தங்கம், பணம், மதுபானம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி கூறினார்.

மும்பை,

மராட்டியத்தில் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்தநாள் முதல் ரூ.43¾ கோடி தங்கம், பணம், மதுபானம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி கூறினார்.

தேர்தல் நடத்தை விதி

மராட்டிய சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த மாதம் 21-ந் தேதி வெளியானது. அன்று முதல் மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்தது. இதையடுத்து வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் மற்றும் மதுபாட்டில்கள் போன்றவை பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ரகசிய தகவல்களின் பேரிலும் பணம் உள்ளிட்ட பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ள இடங்களில் சோதனை நடத்தி, அவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர்.

ரூ.43¾ கோடி பொருட்கள்

இதுகுறித்து கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி திலிப் ஷிண்டே கூறியதாவது:-

தேர்தல் பறக்கும் படையினர், கண்காணிப்பு குழுவினர், போலீசார், வருமான வரித்துறையினர், கலால் வரித்துறையினரும் பல்வேறு இடங்களில் பணம், மதுபானங்களை பறிமுதல் செய்தனர். இதுவரை ரூ.9½ கோடி பணம், ரூ.9¾ கோடி மதிப்பிலான 12 லட்சம் லிட்டர் மதுபானம், ரூ.15¾ கோடி மதிப்பிலான போதை பொருட்கள், ரூ.8¾ கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் ரூ.43¾ கோடி பணம், நகை உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுதவிர மும்பையில் விதிகளை மீறி செயல்பட்ட மதுபான விடுதிகள், ஓட்டல்கள், பார்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கலால் துறை கமிஷனர் பிரஜக்தா வர்மா தெரிவித்தார்.

Next Story