மதுபோதையில், நண்பரின் 5 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் - தர்மஅடி கொடுத்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்
ஆனைமலை அருகே 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
ஆனைமலை,
கேரள மாநிலம் குன்னங்காட்டு பதியைச் சேர்ந்தவர் கருப்பு. இவருடைய மகன் கார்த்தி (வயது 24). கூலி வேலை செய்து வரும் இவர் சம்பவத்தன்று மாலை நண்பர் முருகன் என்பவருடன் ஆனைமலை பகுதிக்கு வந்துள்ளார்.
பின்னர் கார்த்தி, முருகன் மற்றும் ஆனைமலையை சேர்ந்த நண்பருடன் மதுபாட்டில்களை வாங்கிக்கொண்டு ஒரு தோட்டத்திற்கு சென்று மது குடித்தனர்.
போதை தலைக்கேறிய நிலையில் கார்த்தி, தன்னுடன் மது குடித்த ஆனைமலை பகுதியை சேர்ந்த நண்பரது வீட்டுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்த நண்பரது மகளான 5 வயது சிறுமியிடம், கடைக்கு சென்று பிஸ்கெட் வாங்கித்தருவதாக கூறி, தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார்.
நீண்டநேரமாகியும் சிறுமியும், கார்த்தியும் வராததால், சிறுமியின் தந்தை செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் கார்த்தி போனை எடுக்கவில்லை. சுமார் 2 மணி நேரம் கழித்து அந்த சிறுமியுடன் கார்த்தி திரும்ப வந்தார்.
அப்போது அந்த சிறுமியின் உடலின் பல இடங்களில் வீக்கமும், ரத்த காயமும் இருந்தது. சிறுமியின் தந்தையும், அவருடைய மனைவியும் சந்தேகமடைந்து மகளிடம் விசாரித்தனர். அப்போது அந்த சிறுமியை கார்த்தி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை, ஆத்திரம் அடைந்து கார்த்தியை அரிவாளால் வெட்டினார். சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தகவல் ஊர் முழுவதும் வேகமாக பரவியது. இதனை அடுத்து அப்பகுதியினர் ஆவேசம் அடைந்து அங்கு வந்தனர். இதனால் கார்த்தி அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் அவரை பிடித்து பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
கார்த்தி படுகாயம் அடைந்ததால், அவரை பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பாலியல் பலாத்காரத்தால் படுகாயம் அடைந்த சிறுமி பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சிறுமி கவலைக்கிடமாக இருப்பதால் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு மேல்சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டாக்டர்கள் குழுவினர் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கார்த்தி மீது ஆனைமலை போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கார்த்திக்கு உடந்தையாக இருந்த அவருடைய நண்பர் முருகன் என்பவரும் கைது செய்யப்பட்டு அவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஆனைமலை பகுதியில் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
Related Tags :
Next Story