சேலத்தில் ரூ.6½ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்


சேலத்தில் ரூ.6½ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 20 Oct 2019 10:15 PM GMT (Updated: 20 Oct 2019 8:39 PM GMT)

சேலத்தில் ரூ.6½ லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சேலம், 

தமிழகத்தில் பான்பராக், குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் பெரும்பாலான பெட்டி கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை ரகசியமாக வைத்து விற்பனை செய்து வருகிறார்கள். வடமாநிலங்களில் இருந்து ரகசியமாக கொண்டுவந்து இந்த வியாபாரத்தை சிலர் நடத்துகின்றனர்.

குறிப்பாக சேலம் செவ்வாய்பேட்டை, சூரமங்கலம், கிச்சிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு லாரிகளிலும், பார்சல் சர்வீஸ் மூலமாகவும் புகையிலை பொருட்கள் கடத்தி வரப்பட்டு குடோன்களில் பதுக்கப்படுகிறது.

23 பண்டல்கள்

இந்தநிலையில் உத்தரபிரதேசத்தில் இருந்து சூரமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பார்சல் கம்பெனிக்கு நேற்று முன்தினம் 23 பண்டல்கள் வந்தன. அந்த பண்டல்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதாக தகவல் அறிந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்த பார்சல் சர்வீஸ் கம்பெனியில் சோதனை நடத்தினர். அங்கு பண்டல்களில் 800 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது. இதன் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.

இது தொடர்பாக சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் 21 பண்டல்கள் டவுன் ஜலால்புறாவை சேர்ந்த சித்திக் (வயது 28) என்பவருக்கும், 2 பண்டல்கள் நெத்திமேடு பகுதியை சேர்ந்த ரேகா என்பவருக்கும் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சித்திக், ேரகா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை சூரமங்கலம் பார்சல் நிறுவனத்திற்கு மீண்டும் 7 பண்டல்களில் புகையிலை பொருட்கள் வந்தன. அதன் மதிப்பு ரூ.1½ லட்சம் ஆகும். இந்த பண்டல்களும் உத்தர பிரதேசத்தில் இருந்து சித்திக்கிற்காக வந்துள்ளது. இதையடுத்து 7 பண்டல்களில் இருந்து 300 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் 2 நாட்களில் இரு இடங்களிலும் கைப்பற்றப்பட்ட ரூ.6½ லட்சம் புகையிலை பொருட்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே நேற்று முன்தினம் களரம்பட்டியில் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக சேலம் டவுன் ஜலால்புறாவை சேர்ந்த சித்திக், ஆரிப் (30), அஜ்மல் (21) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story