திருவண்ணாமலை மாவட்டத்தில் பயனற்ற ஆழ்துளை கிணறுகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்


திருவண்ணாமலை மாவட்டத்தில் பயனற்ற ஆழ்துளை கிணறுகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 29 Oct 2019 3:45 AM IST (Updated: 28 Oct 2019 11:57 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தில் பயனற்ற ஆழ்துளை கிணறுகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

திருவண்ணாமலை,

விவசாய தேவைக்காக ஆழ்துளை கிணறுகள் போடப்படுகின்றன. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து போனதால் தண்ணீரின்றி ஆழ்துளை கிணறுகள் பயனற்று போகிறது. அந்த கிணற்றில் மண்ணை நிரப்பி மூடுவதற்கு விவசாயிகள் முன்வருவதில்லை. இதனால் ஆழ்துளை கிணற்றில் விழுந்து சிறுவர்கள் உயிரிழப்பது தொடர்கிறது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த புலவன்பாடி கிராமத்தில் கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தேவி (வயது 4) என்ற சிறுமி விவசாய நிலத்தில் மூடப்படாமல் இருந்த 300 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்தாள்.

இதேபோல் கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கலசபாக்கம் அருகே கிடாம்பாளையம் கிராமத்தில் சுஜித் (1½) என்ற சிறுவன் மூடப்படாமல் இருந்த 160 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்தான்.

தற்போது திருச்சியை அடுத்த மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் ஆரோக்கியராஜ் மகன் சுஜித் (2) ஆழ்துளை கிணற்றில் கடந்த 25-ந் தேதி மாலை விழுந்தான். இந்த சிறுவனை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஆழ்துளை கிணறுகள் குறித்து வருவாய் மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்யாததும், விவசாயிகளின் கவன குறைவினால் தான் ஆழ்துளை கிணறுகளில் சிறுவர், சிறுமிகள் விழுந்து விடுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து மேலும் அவர்கள் கூறியதாவது:-

தமிழகத்தில் கடந்த 2013 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் ஆழ்துளை கிணறுகளில் சிறுவர், சிறுமிகள் விழுந்து அதிகளவில் உயிரிழந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 குழந்தைகள் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிர்ந்துள்ளனர்.

அதன்பிறகு ஆழ்துளை கிணறுகளை மூடாதவர்கள் மீதும், அனுமதி பெறாமல் ஆழ்துளை கிணறுகள்அமைத்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதிகாரிகள் ஆய்வு பணி 2015-ம் ஆண்டுக்கு பிறகு நடைபெறவில்லை.

இந்த நிலையில் நேற்று வாட்ஸ்அப்பில் திருவண்ணாமலை அருகில் உள்ள நபி.தேவனந்தல் பகுதியில் ஆழ்துளை கிணறு மூடப்படாமல் உள்ளதாக தகவல் பரவியது. இதையடுத்து சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று திறந்த நிலையில் உள்ள ஆழ்துளை கிணற்றை மூடினர்.

அதேபோல் நேற்று முன்தினம் திருவண்ணாமலை அடிஅண்ணாமலை பகுதியில் ஒரு ஆழ்துளை கிணறு மூடப்பட்டது. ஆழ்துளை கிணற்றுக்குள் சிறுவர், சிறுமிகள் சிக்கும் கோர விபத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் மீண்டும் கள ஆய்வு நடத்தி மூடப்படாமல் உள்ள ஆழ்துளை கிணறுகளை மூட கலெக்டர் கந்தசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story