நாகர்கோவில் அருகே முந்திரி காட்டில் கிடந்த மனித எலும்புகள் போலீசார் விசாரணை


நாகர்கோவில் அருகே முந்திரி காட்டில் கிடந்த மனித எலும்புகள் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 31 Oct 2019 11:00 PM GMT (Updated: 31 Oct 2019 8:29 PM GMT)

நாகர்கோவில் அருகே முந்திரி காட்டில் கிடந்த மனித எலும்புகளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலகிருஷ்ணன்புதூர்,

நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனி அருகே தாமரைகுட்டிவிளையில் ஏராளமான முந்திரி காடுகள் உள்ளன. நேற்று காலையில் அந்த வழியாக சென்றவர்கள் முந்திரி காட்டில் மனித எலும்புகள் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று எலும்புகளை பார்வையிட்டனர். அப்போது, எலும்பு கூடு சிதைந்த நிலையில் துண்டுகளாக கிடந்தது. மேலும், அருகில் சட்டை, லுங்கி, உள்ளாடை போன்றவையும் கிடந்தன. இதை பார்வையிட்ட போலீசார், இறந்தவர் ஆணாக இருக்கலாம் என்று கூறினர்.

மாயமான வாலிபரா?

இதையடுத்து அந்த பகுதியில் மாயமானவர்களின் விவரம் குறித்து சேகரிக்க தொடங்கினர். அப்போது, தாமரைகுட்டிவிளையை சேர்ந்த மரிய கணேஷ் (வயது 35) என்ற கட்டிட தொழிலாளி கடந்த ஒரு மாதத்துக்கு முன் தனது நண்பரின் மோட்டார் சைக்கிளுடன் மாயமானது தெரிய வந்தது. அவர் சென்ற மோட்டார் சைக்கிள் கடந்த 15 நாட்களுக்கு முன்பு முந்திரி காட்டு பகுதியில் இருந்து மீட்கப்பட்டது.

இதையடுத்து இறந்தவர் மரிய கணேசாக இருக்கலாம் என போலீசார் கருதினர். தொடர்ந்து, அவரது உறவினர்களை அழைத்து வந்து எலும்புகள் மற்றும் ஆடைகளை காட்டி விசாரணை நடத்தினர். அப்போது, உறவினர்கள் அங்கு கிடந்த ஆடைகள் மரிய கணேஷ் அணிந்திருந்தவை என்று கூறினார்கள். ஆனாலும், இதை உறுதிபடுத்த போலீசார் மீட்கப்பட்ட எலும்புகளை டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர். மேலும், இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story