பெங்களூரு வளர்ச்சிக்கு புதிய திட்டம் தயார் முதல்-மந்திரி எடியூரப்பா தகவல்


பெங்களூரு வளர்ச்சிக்கு புதிய திட்டம் தயார் முதல்-மந்திரி எடியூரப்பா தகவல்
x
தினத்தந்தி 31 Oct 2019 11:40 PM GMT (Updated: 31 Oct 2019 11:40 PM GMT)

பெங்களூரு வளர்ச்சிக்கு புதிய திட்டம் தயார் என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.

பெங்களூரு,

பெங்களூரு மாநகராட்சி எடியூர் வார்டில் உள்ள பூங்காவில் இயற்கை வனப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்துகொண்டு வனதேவதை சிலையை திறந்துவைத்து பேசியதாவது:-

நான் முதல்-மந்திரியான பிறகு வாரத்திற்கு ஒரு முறை பெங்களூருவில் நகர்வலம் மேற்கொள்வதாக அறிவித்தேன். ஆனால் இதுவரை ஒரு முறை மட்டுமே நகர்வலம் மேற்கொண்டுள்ளேன். இனி வாரம் ஒரு முறை நகர்வலம் நடத்தி மக்களின் குறைகளை போக்குவேன். வளர்ச்சி திட்ட பணிகளுக்கு வேகம் கொடுக்கும் பணியை செய்வேன்.

சமீபகாலமாக வளர்ச்சியின் பெயரில் இயற்கை மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. வனப்பகுதிகள் நாசமாக்கப்படுவதால், அது சுற்றுச்சூழல் மீது பாதிப்பை ஏற்படுத்துகிறது. கடந்த 50 ஆண்டுகளில் உலகில் வனப்பகுதி 8 சதவீதமும், மலை குன்றுகள் 27 சதவீதமும் அழிக்கப்பட்டுள்ளன. கடலை தவிர 40 சதவீத நீர் ஆதாரம் அசுத்தமாகியுள்ளது.

இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து மக்களிடையே சமீபகாலமாக விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. பெங்களூரு வளர்ச்சிக்கு புதிய திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. குறித்த காலக்கெடுவுக்குள் நகரை மேம்படுத்த நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

இதில் வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story