மு.க.ஸ்டாலின் செயல்பாடு சிறப்பானதாக இல்லை: எடப்பாடி பழனிசாமி ஆளுமை மிக்கவராக திகழ்கிறார் - சரத்குமார் பேட்டி
கருணாநிதியுடன் ஒப்பிடும்போது மு.க.ஸ்டாலின் செயல்பாடு சிறப்பானதாக இல்லை. ஆனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆளுமை மிக்கவராக திகழ்கிறார் என சரத்குமார் தெரிவித்தார்.
வேலூர்,
சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் நேற்று வேலூர் வந்தார். இங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வருகிற 10-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது உள்ளாட்சித் தேர்தலில் எங்கள் நிலைப்பாடு குறித்து அறிவிப்போம். தற்போது வரை அ.தி.மு.க. கூட்டணியில் தான் நாங்கள் நீடித்து வருகிறோம். தொடர்ந்து கூட்டணியில் நீடிப்பது குறித்து தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு பேசி முடிவெடுக்கப்படும். தொண்டர்களின் கருத்துகளை கேட்டறிந்து கூட்டணி இறுதி செய்யப்படும்.
தி.மு.க.வில் குடும்ப அரசியல் நடைபெறுகிறது. ஸ்டாலினுக்கு பிறகு அவரது மகன் உதயநிதி வந்துள்ளார். அவர்கள் குடும்பம் மட்டுமே இருக்கும். தி.மு.க. தொண்டர்களுக்கு எந்த வாய்ப்பும் கிடைக்காது.
கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய 2 தலைவர்களின் மறைவுக்குப் பிறகு கருணாநிதியுடன் ஒப்பிடும் அளவுக்கு மு.க.ஸ்டாலின் செயல்பாடு சிறப்பானதாக இல்லை. அதே சமயம் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆளுமை மிக்கவராக திகழ்கிறார்.
அதன் அடிப்படையில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தோம். ஏற்கனவே ஜெயலலிதா இருக்கும்போது கூட்டணியில் இருந்த காரணத்தால் தொடர்ந்து அ.தி.மு.க. வுடன் பயணிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. நடிகர் விஜய் உள்பட யார் அரசியலுக்கு வந்தாலும் நாங்கள் ஏற்றுக் கொள்வோம். 7 பேர் விடுதலையில் ஏற்கனவே கவர்னர் முடிவு எடுக்கலாம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இவர்கள் ஏற்கனவே தண்டனை அனுபவித்து விட்டார்கள் என்று சொல்லி வருகிறோம்.
அவர்களை விடுதலை செய்யும் நேரத்தில் சீமான் போன்றவர்கள் நாங்கள் தான் கொலை செய்தோம் என்று கூறுவது வேதனையாக உள்ளது.
ரஜினிக்கு சிறப்பு விருது மத்திய அரசு வழங்குவதாக அறிவித்திருப்பது அவரை பா.ஜ.க.வில் இழுப்பதற்கான முயற்சி என சிலர் கருத்து கூறுகின்றனர். அது அவர்களின் கருத்து. ரஜினி, கமல் 2 பேரை ஒப்பிடும்போது ரஜினி சிறப்பான நடிகர் என அவர்கள் முடிவு செய்துள்ளனர். கமலுக்கு ஏன் விருது கொடுக்கவில்லை என்று கூற முடியாது. ஒருவேளை அடுத்த ஆண்டு கமலுக்கு கொடுக்கலாம். சுஜித்தை மீட்க அரசு போராடியது பாராட்டுக்குரியது. குழந்தையின் மரணம் என்னை பாதித்துள்ளது. எனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story