சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் பங்கேற்பு


சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 3 Nov 2019 10:30 PM GMT (Updated: 3 Nov 2019 8:34 PM GMT)

சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிக்கல்,

நாகை மாவட்டம் சிக்கலில் சிங்காரவேலர் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலில் கந்த சஷ்டி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 28-ந்தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் பல்வேறு வாகனங்களில் சிங்காரவேலர் வீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. அப்போது சிங்காரவேலர் ஆட்டுக்கிடா வாகனத்தில் வீதி உலா வந்து சூரனை வதம் செய்தார்.

நேற்று சிங்காரவேலர், வள்ளி-தெய்வானையுடன் தங்க மயில் வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து இரவு முருகன்- வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நாளை(செவ்வாய்க்கிழமை) காலை மகா அபிஷேகமும், மாலை சயன திருக்காட்சியும் நடைபெறுகிறது. இதையடுத்து விடையாற்றி நிகழ்ச்சியுடன் கந்தசஷ்டி விழா நிறைவு பெறுகிறது.

வள்ளலார் கோவில்

மயிலாடுதுறை வள்ளலார் கோவிலில் நேற்று முன்தினம் சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதையொட்டி வதாண்யேஸ்வரர், ஞானாம்பிகை, தெட்சிணாமூர்த்தி மற்றும் சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.

இதில் தருமபுரம் ஆதீன இளைய சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story