டிசம்பர் மாதம் நடைபெறும், உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க. மகத்தான வெற்றிபெறும் - நாங்குநேரி நன்றி அறிவிப்பு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
“டிசம்பர் மாதம் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க. மகத்தான வெற்றிபெறும்“ என்று நாங்குநேரி நன்றி அறிவிப்பு கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
நெல்லை,
நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி விழா, வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் ஆகியவை நாங்குநேரி உச்சிமாகாளி அம்மன் கோவில் திடலில் நேற்று இரவில் நடந்தது. அமைச்சர் தங்கமணி தலைமை தாங்கினார். அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அமைச்சர் ராஜலட்சுமி, நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.பி. பிரபாகரன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:-
நாங்குநேரி சட்டமன்ற தொகுதி நன்றி அறிவிப்பு கூட்டம் ஒரு மாநாடு போல் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த நாங்குநேரி தொகுதி வாக்காளர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எம்.ஜி.ஆர். எந்த நோக்கத்திற்காக இந்த கட்சியை தொடங்கி ஆட்சி நடத்தினாரோ அந்த நோக்கம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இந்த கழகமும், ஆட்சியும் 100 ஆண்டுகள் இருக்கும் என்று ஜெயலலிதா சொன்னதை நிரூபிக்கும் வண்ணம் நாங்குநேரி தொகுதி வெற்றி கிடைத்து உள்ளது.
சமுதாய சீர்திருத்தத்திற்காக தந்தை பெரியாரும், தமிழ் சமுதாயம் முன்னேற வேண்டும் என்று அண்ணாவும், ஏழை-எளிய மக்கள் முன்னேற வேண்டும் என்பதற்காக எம்.ஜி.ஆரும் பாடுபட்டனர். இந்த 3 தலைவர்களையும் ஒருங்கே பெற்று அன்பு, அறிவு, ஆற்றல் பெற்றவர் ஜெயலலிதா.
1972-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கி, 3 முறை முதல்-அமைச்சராக இருந்தார். அப்போது, அ.தி.மு.க.வில் 18 லட்சம் உறுப்பினர்கள் இருந்தார்கள். இந்த இயக்கத்தை 29 ஆண்டுகள் பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்து 1½ கோடி உறுப்பினர்களை சேர்த்து அ.தி.மு.க.வை எக்கு கோட்டையாக மாற்றி உள்ளார்.
எத்தனையோ சோதனைகளை சந்தித்து நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் உழைத்து உள்ளார். 18 ஆண்டுகள் முதல்-அமைச்சராக இருந்து ஏழை, எளிய மக்களுக்காக பாடுபட்டு உள்ளார். அவரது வழியில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செயல்பட்டு கொண்டு இருக்கிறது. இந்த அரசின் சாதனைக்கு நீங்கள் தந்த இந்த வெற்றி ஒரு அடையாளமாக உள்ளது.
எம்.பி. தேர்தலில் தோல்வி அடைந்து விட்டதால், இவர்கள் இனி ஜெயிக்கமாட்டார்கள் என்றும், தமிழக அரசையும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குறை சொல்லிக் கொண்டு இருந்தார். ஆனால் இந்த தொகுதி மக்கள் எங்களுக்கு வெற்றி பெற்று தந்து மு.க.ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்து உள்ளார்கள். நாங்கள் என்றும் இந்த தொகுதி மக்களுக்கு நன்றி கடன் பட்டுக்கொண்டு இருப்போம்.
நாங்குநேரி தேர்தல் பிரசாரத்தின்போது நான் சொன்னேன். அதாவது மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் பதவிக்கு சரிபட்டு வரமாட்டார் என்று தெரிவித்தேன். அதை நீங்கள் உறுதி செய்து மகத்தான வெற்றியை தந்து இருக்கிறீர்கள். நாங்குநேரி தொகுதியை நாங்கள் சொர்க்கபூமியாக மாற்றுவோம். இந்த அரசின் திட்டங்கள் ஒவ்வொரு ஊருக்கும் வந்து சேரும். உங்களுக்கு என்ன தேவை என்பதை உங்களது சட்டமன்ற உறுப்பினரிடம் சொல்லுங்கள். அவர் ஒவ்வொன்றாக நிறைவேற்றி தருவார் என்று நான் உறுதி கூறுகிறேன்.
இன்னும் 15 நாட்களில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாகும். டிசம்பர் மாதம் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க. மகத்தான வெற்றிபெறும். அதை நீங்கள் பெற்றுதர வேண்டும். மக்களுக்காக தியாக வாழ்க்கை வாழ்ந்த ஜெயலலிதா சொன்னது போல் இந்த வெற்றி தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கடம்பூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, உதயகுமார், டாக்டர் விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ, போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், சரோஜா, காமராஜ், வளர்மதி, எம்.எல்.ஏ.க்கள் சண்முகநாதன், சின்னப்பன், விஜிலா சத்யானந்த் எம்.பி., முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், கோகுல இந்திரா, அன்வர்ராஜா, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், அமைப்பு செயலாளர் சுதாபரமசிவம், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பெரியபெருமாள், சிறுபான்மை பிரிவு செயலாளர் கபிரியேல் ஜெபராஜன், எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் ராஜன் கிருபாநிதி, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன், இந்திய தேசிய முஸ்லிம் லீக் மாநில தலைவர் கமருதீன், மாவட்ட சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் டென்சிங் சுவாமிதாஸ், பாளையங்கோட்டை ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் முத்துக்குட்டி பாண்டியன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ராமசுப்பு, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஞானமுத்து, சிவபெருமாள், உமா கண்ணன், நாங்குநேரி ஒன்றிய செயலாளர் விஜயகுமார், அவை தலைவர் தளவை சுந்தர்ராஜ், கண்டிகைபேரி ஜான்சன், மூலைக்கரைப்பட்டி நகர எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் முத்துராமலிங்கம், நாங்குநேரி ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் அசோக்குமார், பாளையங்கோட்டை ஒன்றிய செயலாளர் ராமசுப்பிரமணியன், ராதாபுரம் ஒன்றிய செயலாளர் அந்தோணி அமல்ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ. நன்றி தெரிவித்து பேசினார்.
முன்னதாக புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆளுயரமாலை அணிவிக்கப்பட்டது. மாநகர் மாவட்டம் சார்பில் நெல்லையில் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Related Tags :
Next Story