தூத்துக்குடி அருகே, ரூ.68 லட்சம் செலவில் கூட்டுறவு துணை பதிவாளர் அலுவலகம்


தூத்துக்குடி அருகே, ரூ.68 லட்சம் செலவில் கூட்டுறவு துணை பதிவாளர் அலுவலகம்
x
தினத்தந்தி 6 Nov 2019 4:00 AM IST (Updated: 6 Nov 2019 1:28 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே ரூ.68 லட்சம் செலவில் கூட்டுறவு துணை பதிவாளர் அலுவலகத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட பால்வள கூட்டுறவு சங்க துணை பதிவாளர் அலுவலகம் தூத்துக்குடி அருகே உள்ள முடிவைத்தானேந்தலில் ரூ.68 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று தூத்துக்குடி மாவட்ட ஆவின் ஒன்றிய அலுவலகம் மாநகராட்சி அலுவலகம் எதிரே அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அலுவலகங்கள் திறப்பு விழா நேற்று நடந்தது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காணொலி காட்சி மூலம் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த விழாவுக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி, முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். மாவட்ட ஆவின் தலைவர் என்.சின்னத்துரை, மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன், பால்வள கூட்டுறவு சங்க துணை பதிவாளர் சுரே‌‌ஷ், ஆவின் பொது மேலாளர் திரியேகராஜ் தங்கையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ஆவின் நிறுவன அதிகாரிகள், கூட்டுறவு சங்க அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறும் போது, தூத்துக்குடி மாவட்டத்தில் ஆவின் ஒன்றியம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து பால்வள கூட்டுறவு சங்க துணை பதிவாளர் அலுவலகம் திறக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்ட ஆவின் நிறுவனத்துக்கு புதிதாக 25 ஏக்கர் பரப்பில் பால்பண்ணை அமைக்கப்பட உள்ளது. இதற்காக தண்ணீர் வசதி உள்ள இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் பால்பண்ணை அமைக்கப்படும் என்று கூறினார்.

Next Story