பண்ணை குட்டை அமைத்து, இயற்கை முறையில் சிறுதானிய பயிர் சாகுபடி செய்து அசத்தும் விவசாயி
மழை நீரை சேமிக்கும் வகையில் தனது நிலத்தில் பண்ணை குட்டை அமைத்து இயற்கை முறையில் சிறுதானிய பயிர் சாகுபடியை செய்து விவசாயி ஒருவர் அசத்தி வருகிறார்.
மானாமதுரை,
சிவகங்கை, ராமநாதபுரம் ஆகியவை வறண்ட மாவட்டங்களாகவே இருந்து வருகிறது. இந்த இரு மாவட்டங்களில் ஆண்டுதோறும் பெய்ய வேண்டிய பருவ மழை நன்றாக பெய்தால் மட்டுமே இங்குள்ள சில பகுதியில் குடிதண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க முடியும். இது தவிர பருவ மழை இன்னும் அதிகமாக பெய்து கண்மாய்கள், ஊருணிகள் ஆகிய நீர் நிலைகளில் தண்ணீர் முழுமையாக தேங்கினால் மட்டும் தான் இந்த மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் தங்களது விவசாய நிலத்தில் பயிரிட்டு அறுவடை செய்ய முன்வருவார்கள்.
இத்தகைய சூழ்நிலையில் மானாமதுரை அருகே விவசாயி ஒருவர், மழைநீரை தேக்கி வைக்கும் வகையில் தனது நிலத்தில் பண்ணை குட்டை அமைத்து அதில் போதுமான தண்ணீரை சேமித்து வைத்து சிறுதானிய பயிர்களை சாகுபடி செய்து அதிக லாபத்தை ஈட்டி வருகிறார்.
மானாமதுரை அருகே உள்ளது கிளங்காட்டூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி துபாய் காந்தி(வயது50). கிளங்காட்டூர் கிராமத்திற்கு வைகையாற்றில் இருந்து நீர் வரத்து கால்வாய் இருந்தும் இதுவரை வைகையாற்று தண்ணீர் வந்தது கிடையாது. இதனால் இந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் முற்றிலும் வறண்ட நிலையில் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் விவசாயி துபாய் காந்தி தனது நிலத்தில்14 ஏக்கர் பரப்பளவில் மண்டிக்கிடந்த கருவேல மரங்களை அகற்றி விட்டு அதில் சுமார் 300 அடி நீளம், 100 அடி அகலம் மற்றும் 20 அடி ஆழம் கொண்ட ஒரு பண்ணை குட்டையை ஏற்கனவே அமைத்து சமீபத்தில் பெய்த மழையை பயன்படுத்தி அதில் மழை நீரை சேமித்து வைத்திருந்தார். மேலும் அந்த பண்ணை குட்டையை சுற்றிலும் சுமார் 500 மீட்டர் நீளத்திற்கு அகழி வெட்டி அதிலும் மழை நீரை சேமித்து வைத்துள்ளார். இதையடுத்து இந்த மழை நீரை அவர் இயற்கை விவசாயத்திற்கு பயன்படுத்த முடிவு செய்தார். அதன்படி இயற்கை உரங்களான மாட்டுச்சாணம், ஆட்டுச் சாணம் ஆகியவற்றின் மூலம் சிறுதானிய பயிர்களான கம்பு, சோளம், குதிரை வாலி, கேழ்வரகு, மிளகாய், கீரை வகைகள் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ளார்.
மேலும் இதற்கு முன்பு கடந்தஆண்டு பெய்த மழை நீரை வைத்து தனது நிலத்தில் சுமார் 5 ஏக்கரில் கம்பு தானியம் பயிரிட்டுள்ளார். இந்த கம்பு தானியம் தற்போது ஒரு மாத பயிராக வளர்ந்து இன்னும் 2மாத காலத்திற்குள் அறுவடைக்கு தயாராகி வருகிறது.
இது குறித்து விவசாயி துபாய் காந்தி கூறியதாவது:-
சிவகங்கை மாவட்டம் என்பது வானம் பார்த்த பூமியாகவே உள்ளது. இந்த மாவட்டத்தில் அவ்வப்போது பருவ மழை நன்றாக பெய்து கண்மாய்கள் நிரம்பி மறுகால் சென்றால் மட்டுமே இங்கு விவசாயம் செய்ய முடியும் என்ற நிலை இருந்து வந்தது. இந்நிலையில் விவசாயிகளுக்கு தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் எனது நிலத்தில் பண்ணைகுட்டை அமைத்து, பெய்த மழைநீரை அதில் சேமித்து வைத்து அதன் மூலம் விவசாயத்தை தற்போது தொடங்கி உள்ளேன். இதன் மூலமாகத் தான் தற்போது சிறு தானிய பயிர்கள் பயிரிட்டுள்ளேன். இந்த பண்ணை குட்டை மற்றும் அகழியில் சேமித்த நீரை வைத்து இன்னும் 2 ஆண்டுகளுக்கு பயிர்கள் பயிரிட்டு அறுவடை செய்ய முடியும்.
பொதுவாக விவசாயிகள் தங்களது நிலத்தில் சிறுதானிய பயிர்களை சாகுபடி செய்வதால் அதற்கு அதிக செலவு இருக்காது. மேலும் எனது நிலத்தில் இயற்கை உரங்களை பயன்படுத்தும் வகையில் கிடை மாடு மற்றும் கிடை ஆடு அமைத்துள்ளேன். இதன் காரணமாக இன்னும் 2ஆண்டுகளுக்கு நிலத்தில் பயிரிடும் பயிர்களுக்கு இயற்கை உரங்கள் இருப்பு வைக்க முடியும். மேலும் இங்கு பயிரிடப்படும் கம்பு, குதிரைவாலி ஆகிய சிறுதானிய பயிர்கள் அறுவடைக்கு பின்னர் அதன் தட்டைகள் கால்நடைகளுக்கு உணவாக பயன்படும். தற்போது இங்கு பயிரிட்டுள்ள கம்பு, குதிரை வாலி உள்ளிட்ட பயிர்கள் 3 மாத பயிர்கள் ஆகும். மேலும் இவை அறுவடை காலத்தில் ஏக்கருக்கு 15 மூடைகள் வரை கிடைக்கும். சிறுதானியங்களுக்கு மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு இருப்பதால் வியாபாரிகளே இங்கு வந்து நேரடியாக வாங்கி செல்கின்றனர். இதேபோல் இங்குள்ள விவசாயிகள் தங்களது நிலத்தில் பண்ணை குட்டைகள் அமைத்து சிறுதானியங்கள் பயிரிடும் வகையில் தமிழக அரசு போதிய மானியம் வழங்கினால் மழைநீரை சேமித்து வைத்து விவசாயத்தை பெருக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story