பாரதீய ஜனதாவுக்கும், சிவசேனாவுக்கும் முதல்-மந்திரி பதவியை பகிர்வதில் தேர்தலுக்கு முன் ஒருமித்த கருத்து இருந்தது - சஞ்சய் ராவத் பேட்டி


பாரதீய ஜனதாவுக்கும், சிவசேனாவுக்கும் முதல்-மந்திரி பதவியை பகிர்வதில் தேர்தலுக்கு முன் ஒருமித்த கருத்து இருந்தது - சஞ்சய் ராவத் பேட்டி
x
தினத்தந்தி 7 Nov 2019 12:27 AM GMT (Updated: 7 Nov 2019 12:27 AM GMT)

தேர்தலுக்கு முன் பாரதீய ஜனதாவுக்கும், சிவசேனாவுக்கும் முதல்-மந்திரி பதவியை பகிர்வதில் ஒருமித்த கருத்து இருந்தது என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறினார்.

மும்பை,

மராட்டிய சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா, சிவசேனா கூட்டணியில் முதல்-மந்திரி பதவியை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்டு உள்ள மோதல் காரணமாக புதிய அரசு அமைவதில் இழுபறி நீடித்து வருகிறது.

இது தொடர்பாக அவர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது முதல்-மந்திரி பதவியை பகிர்ந்து கொள்வது தொடர்பாக எப்போது ஒருமித்த கருத்து உருவாகும் என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த சஞ்சய் ராவத், இரண்டு கட்சிகளுக்கும் இடையே முதல்-மந்திரி பதவியை பகிர்ந்து கொள்வதில் தேர்தலுக்கு முன் ஒருமித்த கருத்து இருந்தது என்றார்.

ஆட்சி அமைக்க புதிய திட்டங்கள் உள்ளதா என்ற கேள்வியை நிராகரித்த சஞ்சய் ராவத், தேர்தலுக்கு முன்னர் ஏற்கனவே பேசி முடிவு செய்யப்பட்டதை செயல்படுத்துவதை (ஆட்சியில் சமபங்கு) தான் சிவசேனா எதிர்பார்க்கிறது.

இதுபற்றி விவாதிக்க தான் விரும்புகிறோம். புதிய திட்டங்களில் ஏன் நேரத்தை வீணடிக்க வேண்டும். எந்த ஒரு புதிய திட்டமும் பெறப்படவும் இல்லை. அனுப்பப்படவும் இல்லை.

மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளித்த சஞ்சய் ராவத், அதற்கு நாங்கள் பொறுப்பாக மாட்டோம். அதை செய்ய சதி செய்பவர்கள் மக்களின் தீர்ப்பை அவமதிக்கிறார்கள்.

விவசாயிகளுக்கும், உழைக்கும் மக்களுக்கும் சிவசேனா மீது நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் உள்ளது. சிவசேனாவை சேர்ந்தவர் முதல்-மந்திரி ஆவதற்கு அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story