வேலூர் புதிய பஸ் நிலையத்தில் பரபரப்பு: ஒரே நாளில் 10 அரசு பஸ்கள் ஜப்தி


வேலூர் புதிய பஸ் நிலையத்தில் பரபரப்பு: ஒரே நாளில் 10 அரசு பஸ்கள் ஜப்தி
x
தினத்தந்தி 7 Nov 2019 10:15 PM GMT (Updated: 7 Nov 2019 6:29 PM GMT)

நிலம் கையகப்படுத்தியதற்கு உரிய இழப்பீடு வழங்காததால் நேற்று ஒரே நாளில் வேலூர் புதிய பஸ் நிலையத்தில் 10 அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர், 

வேலூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் கஸ்பா பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். அவருடைய மனைவி கிரிஜம்மாள் (வயது 74). இவருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை 1993-ம் ஆண்டு ஆம்பூரில் பணிமனை அமைப்பதற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கையகப்படுத்தியது. ஆனால் அதற்கான இழப்பீடு வழங்கப்படவில்லை.

இதையடுத்து கிரிஜம்மாள் வேலூர் நில ஆர்ஜித நீதிமன்றத்தில் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கடந்த 2015-ம் ஆண்டு தீர்ப்பு கூறப்பட்டது. அதில், அரசு போக்குவரத்து கழகம் கொடுக்கப்பட வேண்டிய இழப்பீட்டுக்கு பதில் வேலூர் கோட்டத்துக்குட்பட்ட 30 அரசு பஸ்களை ஜப்தி செய்ய உத்தரவிடப்பட்டது.

ஆனால் போக்குவரத்து கழக அதிகாரிகள் தொடர்ந்து இழப்பீடு வழங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். எனினும் கிரிஜம்மாளுக்கு கொடுக்கப்பட வேண்டிய ரூ.1 கோடியே 75 லட்சம் இழப்பீடு கொடுக்க காலதாமதப்படுத்தினர். இதையடுத்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கோர்ட்டு ஊழியர்கள் வேலூர் புதிய பஸ் நிலையத்தில் சென்னைக்கு செல்ல தயாராக இருந்த பஸ் ஒன்றை ஜப்தி செய்தனர்.

இதையடுத்து மீண்டும் அதிகாரிகள் இழப்பீடு கொடுப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதிலும் நடவடிக்கை எதுவும் இல்லை. இதையடுத்து கிரிஜம்மாள் கடந்த வாரம் மேல்முறையீடு செய்தார். அதில் மீதம் உள்ள 29 பஸ்களை ஜப்தி செய்ய நீதிபதி பக்தவச்சலு உத்தரவிட்டார்.

இதையடுத்து நேற்று கோர்ட்டு அமீனா திருப்பதி, ஊழியர்கள், கிரிஜம்மாளின் வக்கீல் சுரேஷ்குமார் மற்றும் அவரது தரப்பினர் வேலூர் புதிய பஸ் நிலையத்துக்கு பஸ்களை ஜப்தி செய்ய வந்தனர். அப்போது அங்கு சென்னை, ஓசூர் போன்ற இடங்களுக்கு செல்ல தயாராக இருந்த 10 பஸ்களை ஜப்தி செய்வதாக கூறி கோர்ட்டு நோட்டீஸ் ஒட்டினர். இதனையடுத்து பஸ்களில் அமர்ந்திருந்த பயணிகள் மாற்று பஸ்களை தேர்வு செய்து சென்றனர்.

இதுகுறித்து வக்கீல் சுரேஷ்குமார் கூறுகையில், ‘29 பஸ்களை ஜப்தி செய்ய வந்தோம். தற்போது முதல் கட்டமாக 10 பஸ்களை ஜப்தி செய்துள்ளோம். இதையடுத்து கிரிஜம்மாளுக்கு சேர வேண்டிய இழப்பீடு கிடைக்காமல் மீண்டும் காலதாமதம் ஏற்பட்டால் மீதம் உள்ள 19 பஸ்களை ஜப்தி செய்வோம்’ என்றார்.

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் ஒரே நேரத்தில் 10 அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story