ஆதரவற்ற நிலையில் மீட்கப்பட்ட மூதாட்டிக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை - கலெக்டர் மலர்விழி நடவடிக்கை


ஆதரவற்ற நிலையில் மீட்கப்பட்ட மூதாட்டிக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை - கலெக்டர் மலர்விழி நடவடிக்கை
x
தினத்தந்தி 8 Nov 2019 10:30 PM GMT (Updated: 8 Nov 2019 8:20 PM GMT)

ஆதரவற்ற நிலையில் மீட்கப்பட்ட மூதாட்டிக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க கலெக்டர் மலர்விழி உத்தரவிட்டார்.

தர்மபுரி,

தர்மபுரியை சேர்ந்தவர் ஈஸ்வரி (வயது 85). இவர் நெசவாளர் காலனி பகுதியில் பராமரிப்பின்றி காலியாக இருந்த வீட்டின் வராண்டா பகுதியில் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் படுத்து இருந்தார். இதை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தனர். 

இதையடுத்து அந்த மூதாட்டியை மீட்டு உரிய சிகிச்சை அளிக்க வருவாய்த்துறையினருக்கு கலெக்டர் மலர்விழி உத்தரவிட்டார். இதன்படி தர்மபுரி தாசில்தார் சுகுமார் தலைமையிலான குழுவினர் மூதாட்டி ஈஸ்வரியை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. 


இதுதொடர்பாக வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது மூதாட்டி ஈஸ்வரிக்கு மகன்கள் மற்றும் மகள்கள் இருப்பது தெரியவந்தது. தர்மபுரி நெசவாளர் காலனியில் வசிக்கும் ஒரு மகன் வீட்டிற்கு அண்மையில் வந்த இவர் அங்கு போதிய இடவசதி இல்லாததால் அந்த பகுதியில் பராமரிப்பின்றி கிடந்த வீட்டின் வெளிப்பகுதியில் தங்க வைத்ததும், அவ்வப்போது மூதாட்டிக்கு வீட்டில் இருந்து உணவு கொண்டு வந்து கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஈஸ்வரியின் குடும்பத்தை சேர்ந்தவர்களிடம் வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story