ரெயிலில் வந்த 1,489 டன் உரம்


ரெயிலில் வந்த 1,489 டன் உரம்
x
தினத்தந்தி 14 Nov 2019 10:15 PM GMT (Updated: 14 Nov 2019 6:24 PM GMT)

சென்னை, காரைக்கால், ஈரோடு மற்றும் கொச்சியில் இருந்து திண்டுக்கல்லுக்கு ரெயிலில் 1,489 டன் உரம் வந்தது.

திண்டுக்கல், 

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் சமீபத்தில் பெய்த பரவலான மழை காரணமாக பயிர் சாகுபடி பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. குறிப்பாக நெல், மக்காச்சோளம் மற்றும் பருத்தி ஆகியவற்றை விவசாயிகள் அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர். இந்தநிலையில் வேளாண் துறை சார்பில் பயிர் சாகுபடிக்கு தேவையான உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் தட்டுப்பாடு இல்லாத வகையில் அவ்வப்போது கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மக்காச்சோள பயிர்களின் விளைச்சலை அதிகரிப்பதற்காக யூரியா உரங்களை விவசாயிகள் பயன்படுத்துவார்கள். இந்த உரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தனியார் உரக்கடைகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இதற்காக சென்னை, காரைக்கால் மற்றும் ஈரோட்டில் இருந்து உரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில், சென்னை மணலியில் இருந்து திண்டுக்கல்லுக்கு ரெயில் மூலம் 400 டன்னும், காரைக்காலில் இருந்து மதுரை வரை ரெயிலிலும், பின்னர் அங்கிருந்து லாரி மூலம் திண்டுக்கல்லுக்கு 300 டன்னும், ஈரோட்டில் இருந்து லாரி மூலம் 75 டன்னும் என மொத்தம் 775 டன் யூரியா உரம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதே போல் சென்னை மற்றும் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து 714 டன் காம்பளக்ஸ் உரம் ரெயில் மூலம் திண்டுக்கல்லுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேளாண்மை இணை இயக்குனர் பாண்டித்துரை கூறுகையில், திண்டுக் கல் மாவட்டத்தில் தற்போது மக்காச்சோள பயிர்கள் அறுவடை காலத்தை நெருங்கியுள்ளது. இந்த சமயத்தில் யூரியா உரம் அதிக அளவில் விவசாயிகளால் பயன்படுத்தப்படும். எனவே உரத்தட்டுப்பாடு ஏற்படக்கூடாது என்பதற்காக 1,489 டன் யூரியா மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தனியார் உரக்கடைகளுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது என்றார்.

Next Story