உள்ளாட்சி தேர்தலை நிறுத்த மு.க.ஸ்டாலின் முயற்சிக்காமல் இருக்க வேண்டும் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு


உள்ளாட்சி தேர்தலை நிறுத்த மு.க.ஸ்டாலின் முயற்சிக்காமல் இருக்க வேண்டும் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு
x
தினத்தந்தி 15 Nov 2019 10:30 PM GMT (Updated: 15 Nov 2019 5:28 PM GMT)

உள்ளாட்சி தேர்தலை நிறுத்த மு.க.ஸ்டாலின் முயற்சிக்காமல் இருக்க வேண்டும் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.

திண்டுக்கல், 

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சியினர் தேர்தல் முன்னேற்பாடு பணிகளை தொடங்கியுள்ளனர். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில், உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுபவர்களுக்கான விருப்பமனு வழங்கும் முகாம் திண்டுக்கல்லில் நத்தம் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. இதற்கு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே நடத்தப்பட்டிருக்க வேண்டும். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்படுத்திய தடை காரணமாகவே தேர்தல் நடத்துவதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. அந்த தேர்தலை எந்த தடையும் இல்லாமல் நடத்த நாங்கள் பாடுபட்டு வருகிறோம்.

ஆனால் தேர்தலை நிறுத்த நாங்கள் (அ.தி.மு.க.) முயற்சித்து வருவதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். உண்மையில் தேர்தலை நிறுத்தும் எந்த முயற்சியிலும் ஈடுபட வேண்டாம் என்று அவரிடம்தான் கூற வேண்டும். பத்திரிகை மூலம் அவரிடம் இதை நான் கேட்டுக்கொள்கிறேன். தமிழகத்தில் வெற்றிடம் நிலவுவதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். வெற்றிடம் என்பது சினிமா துறையில் தான் தற்போது உள்ளது. எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு பிறகு அந்த இடத்தை நிரப்ப இதுவரை யாரும் வரவில்லை.

ஆனால் அ.தி.மு.க.வில் வெற்றிடம் இதுவரை ஏற்படவில்லை. எம்.ஜி.ஆருக்கு பிறகு ஜெயலலிதா, ஜெயலலிதாவுக்கு பிறகு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சியையும், அரசையும் சிறந்த முறையில் வழிநடத்துகின்றனர். நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க.வின் பலத்தை எதிரணிக்கு காட்டியுள்ளது. அது உள்ளாட்சி தேர்தலிலும் எதிரொலிக்கும். மக்களின் பேராதரவோடு உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. 100 சதவீத வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதையடுத்து உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிடும் பொன்முத்து மருதராஜிடம் உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனுவை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பரமசிவம் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் மருதராஜ், துணை தலைவர் கண்ணன், அபிராமி கூட்டுறவு வங்கி தலைவர் பாரதி முருகன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story