சேலத்தில் குண்டர் சட்டத்தில் 2 ரவுடிகள் கைது


சேலத்தில் குண்டர் சட்டத்தில் 2 ரவுடிகள் கைது
x
தினத்தந்தி 20 Nov 2019 11:00 PM GMT (Updated: 20 Nov 2019 7:36 PM GMT)

சேலத்தில் குண்டர் சட்டத்தில் 2 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.

சேலம்,

சேலம் தாதுபாய்குட்டை பகுதியில் கடந்த மாதம் 17-ந் தேதி சித்துராஜ் என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை அரிசிபாளையத்தை சேர்ந்த ரவுடிகள் ரமே‌‌ஷ், கிருபாகரன் மற்றும் இவர்களது கூட்டாளி முஸ்தபா ஆகியோர் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி 2 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம், செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றனர். இது குறித்து சேலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமே‌‌ஷ் உள்பட 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதேபோல், கடந்த ஆண்டு முன்விரோதம் காரணமாக மாசிநாயக்கன்பட்டியை சேர்ந்த பார்த்தசாரதி என்பவரை ரமே‌‌ஷ், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்து அவரது உடலை ரெயில்வே தண்டவாளத்தில் வீசி சென்றுள்ளனர். இந்த கொலை சம்பந்தமாக அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட மங்களம் கிராமத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவரின் வீட்டில் கொள்ளையடிக்க ரவுடி கிருபாகரன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து திட்டம் தீட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டார். இதுதவிர, சேலம் களரம்பட்டியில் அருண்குமார் என்பவரிடம் பணம் பறிப்பதற்காக கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குண்டர் சட்டத்தில் கைது

ரவுடிகளான ரமே‌‌ஷ், கிருபாகரன் ஆகியோர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சேலம் டவுன் போலீசார், மாநகர போலீஸ் கமி‌‌ஷனருக்கு பரிந்துரை செய்தனர். அதன்பேரில் ரவுடிகள் ரமே‌‌ஷ், கிருபாகரன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்து கமி‌‌ஷனர் செந்தில்குமார் நேற்று உத்தரவிட்டார். ஏற்கனவே, 2015-ம் ஆண்டு இவர்கள் இருவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story