திருவாரூர்-காரைக்குடி பயண நேரம் விரைவில் 3 மணி நேரமாக குறைக்கப்படும் அதிகாரி தகவல்


திருவாரூர்-காரைக்குடி பயண நேரம் விரைவில் 3 மணி நேரமாக குறைக்கப்படும் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 23 Nov 2019 11:00 PM GMT (Updated: 23 Nov 2019 6:50 PM GMT)

திருவாரூர்-காரைக்குடி பயண நேரம் விரைவில் 3 மணி நேரமாக குறைக்கப்படும் என தெற்கு ரெயில்வே திருச்சி கோட்ட மேலாளர் கூறினார்.

பட்டுக்கோட்டை,

திருவாரூர் மாவட்ட ரெயில் உபயோகிப்பாளர்கள் சங்க தலைவர் பாஸ்கர், பட்டுக்கோட்டை ரெயில் பயணிகள் நல சங்க தலைவர் ஜெயராமன், செயலாளர் விவேகானந்தன், ஒருங்கிணைப்பாளர் கலியபெருமாள் ஆகியோர் திருச்சியில் தெற்கு ரெயில்வே கோட்ட மேலாளர் அஜய்குமார் மற்றும் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அந்த கோரிக்கை மனுவில், திருவாரூர்-காரைக்குடி இடையே பயண நேரம் 6½ மணி நேரத்துக்கும் அதிகமாக உள்ளது. இதை குறைக்க வேண்டும். ரெயில்வே கேட்டுகளுக்கு பணியாளர்களை விரைவில் நியமித்து ரெயில் சேவையை முழுமையாக தொடங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு இருந்தது.

கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட ரெயில்வே கோட்ட மேலாளர் அஜய்குமார் கூறியதாவது:-

பயண நேரம் குறைப்பு

திருவாரூர்-காரைக்குடி அகல ரெயில் பாதையில் ரெயில்வே கேட்டுகளுக்கு பணியாளர்களை நியமிக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது திருவாரூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் ரெயில் காரைக்குடிக்கு 12.30 மணிக்கு சென்றடைகிறது. அதேபோல காரைக்குடியில் இருந்து 2.30 மணிக்கு புறப்படும் ரெயில் திருவாரூர் சென்று சேர இரவு 9 மணிவரை ஆகிறது.

எனவே ரெயில்வே கேட்டுகளுக்கு ஆட்களை நியமித்து பயண நேரம் விரைவில் 3 மணி நேரமாக குறைக்கப்படும். இந்த வழித்தடத்தில் இரவு நேரத்தில் பணியாற்ற ‘ஸ்டே‌‌ஷன் மாஸ்டர்கள்’ நியமிக்கும் பணி மார்ச் மாதத்துக்குள் நிறைவடைந்து விடும்.

சென்னைக்கு ரெயில்

அதன் பிறகு காரைக்குடியில் இருந்து பட்டுக்கோட்டை, திருவாரூர் வழியாக சென்னைக்கு விரைவு ரெயில் போக்குவரத்து தொடங்கப்படும். அடுத்த மாதம்(டிசம்பர்) 10-ந் தேதிக்கு பிறகு பயணிகள் ரெயில் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story