தேனி கலெக்டர் அலுவலகம் முன் உள்ளாட்சி துறை ஊழியர்கள், சலவைத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


தேனி கலெக்டர் அலுவலகம் முன் உள்ளாட்சி துறை ஊழியர்கள், சலவைத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 Dec 2019 10:15 PM GMT (Updated: 2 Dec 2019 5:49 PM GMT)

தேனி கலெக்டர் அலுவலகம் முன் உள்ளாட்சி துறை ஊழியர்கள் மற்றும் சலவைத் தொழிலாளர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி தனித்தனியாக ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தேனி,

தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை குடிநீர் தொட்டி இயக்குபவர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசாணைப்படி அனைத்து துப்புரவு பணியாளர்களுக்கும் ஓய்வூதியம், பணிக்கொடையை துரிதமாக வழங்க வேண்டும். தூய்மை காவல் பணியாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும். ஒரே வேலைக்கு இரண்டு விதமான சம்பளம் வழங்குவதை கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணை தலைவர் குருசாமி தலைமை தாங்கினார். இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் முருகன், மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டு பேசினர்.

மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பினர். இதில் உள்ளாட்சித்துறை ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

அதேபோல், தமிழ்நாடு வண்ணார் எழுச்சி நலச் சங்கத்தின் சார்பில் சலவைத் தொழிலாளர்கள் பலர் கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாநில மகளிரணி தலைவி மாரியம்மாள் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில், சுருளிப்பட்டி பூதிமெட்டுக்களத்தில் உள்ள தொட்டம்மன் சலவை துறை பகுதியில் மாற்று சமூகத்தினர் ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்க வேண்டும், வடபுதுப்பட்டியில் உள்ள சலவைத்துறை பகுதியில் பயன்பாடு இன்றி உள்ள கழிப்பிடத்தை அகற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து அவர்கள் தங்களின் கோரிக்கை தொடர்பான மனுவை, கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மனுக்கள் பெறும் பெட்டியில் செலுத்தினர்.

Next Story