வெங்காய விலை உயர்வு அரசுக்கு எதிராக மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது வைகோ பேட்டி


வெங்காய விலை உயர்வு அரசுக்கு எதிராக மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது வைகோ பேட்டி
x
தினத்தந்தி 7 Dec 2019 11:15 PM GMT (Updated: 7 Dec 2019 6:31 PM GMT)

வெங்காய விலை உயர்வு அரசுக்கு எதிராக மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.

செம்பட்டு,

தஞ்சைக்கு செல்வதற்காக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, ெசன்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் நேற்று மாலை 4 மணியளவில் வந்தார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசு, உள்ளாட்சி தேர்தலில் குழப்பத்திற்கு மேல் குழப்பத்தை உருவாக்கி உள்ளது. நேரடித் தேர்தல் என்று சொல்லிவிட்டு கடைசியில் மறைமுகத் தேர்தல் என்றது. ஊராட்சிகளுக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிக்கு இப்போது தேர்தல் கிடையாது.

புதிய மாவட்டங்களை உருவாக்கிய போது நிச்சயமாக தேர்தல் நடத்துவதற்கு நீதிமன்றம் தடை விதிக்கும் என்று எல்லோரும் எதிர்பார்த்தோம். இப்போது நான்கு மாதம் தவணை கேட்டிருக்கிறார்கள். இப்போது அவர்கள் தேர்தலை எந்த விதத்தில் நடத்துவது என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள்.

வெற்றி பெற ஆயத்தம்

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தொடக்கத்தில் இருந்தே நியாயமான காரணங்களை முன்வைத்து தி.மு.க. உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் வழக்குகள் தொடுத்தது. தொகுதி வரைமுறையை ஒழுங்குபடுத்தாமல் தேர்தலை நடத்துவது என்பது சமூகநீதிக்கு விரோதமானது. அந்த அடிப்படையில்தான் தி.மு.க. வழக்கு தொடர்ந்தது. நீதிக்கு வெற்றி கிடைத்துள்ளது.

எனவே உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. தலைமையிலான அணி எந்தவிதத்தில் தேர்தல் வந்தாலும் சந்தித்து வெற்றி பெறுவதற்கு ஆயத்தமாக இருக்கிறது. வெங்காய விலை உயர்வானது, அரசிற்கு எதிராக மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story