அரசு ஆஸ்பத்திரியில் பிறந்து 5 நாட்களே ஆன பெண் குழந்தை கடத்தல் போலீசார் விசாரணை


அரசு ஆஸ்பத்திரியில் பிறந்து 5 நாட்களே ஆன பெண் குழந்தை கடத்தல் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 9 Dec 2019 11:00 PM GMT (Updated: 10 Dec 2019 12:24 AM GMT)

கிரு‌‌ஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் பிறந்து 5 நாட்களே ஆன பெண் குழந்தை கடத்தப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கிரு‌‌ஷ்ணகிரி,

கிரு‌‌ஷ்ணகிரி அருகே உள்ளது நாயக்கனூர். இந்த ஊரைச் சேர்ந்தவர் ரவி (வயது 29). லாரி டிரைவர். இவரது மனைவி காயத்திரி (25). இவர்களுக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. அதில் ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் இறந்து விட்டது. 2 பெண் குழந்தைகள் மட்டும் உள்ளனர்.

இந்தநிலையில் காயத்திரி மீண்டும் கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர் கடந்த 5-ந் தேதி கிரு‌‌ஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து பிறந்த பச்சிளங்குழந்தையுடன் காயத்திரி கிரு‌‌ஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் பிரசவ வார்டில் இருந்து வந்தார்.

கடத்தல்

நேற்று மதியம் காயத்திரியை பார்ப்பதற்காக அவரது மாமியார் மற்றும் குழந்தைகள் வந்தனர். இதையடுத்து குழந்தையை படுக்கையில் படுக்க வைத்து விட்டு காயத்திரி வெளியே சென்றார். பின்னர் அவர் மாமியார் மற்றும் குழந்தைகளை பார்த்து விட்டு மீண்டும் பிரசவ வார்டுக்கு வந்து பார்த்தார். அப்போது குழந்தை மாயமாகி இருந்தது. அந்த குழந்தையை யாரோ கடத்தி சென்றது தெரியவந்தது. இதனால் காயத்திரி அதிர்ச்சி அடைந்து குழந்தையை காணவில்லை எனக்கூறி கூச்சலிட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் அவர் இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் செய்தார். அவர்கள் இது குறித்து கிரு‌‌ஷ்ணகிரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் கிரு‌‌ஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு குமாரும் அங்கு சென்றார்.

கண்காணிப்பு கேமரா

இதைத் தொடர்ந்து போலீசார் குழந்தையின் தாய் காயத்திரியிடம் விசாரணை நடத்தினார்கள். அந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா எதுவும் இல்லை. இதனால் குழந்தையை யார் எடுத்து சென்றார்கள் என தெரியவில்லை. இதையடுத்து அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் யாரேனும் குழந்தையை எடுத்து செல்லும் வீடியோக்கள் பதிவாகி உள்ளதா? என்று போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை கடத்தி சென்றவரை தீவிரமாக தேடி வருகிறார்கள். கிரு‌‌ஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் பிறந்து 5 நாட்களே ஆன பெண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story