குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து: ஈரோட்டில் தி.மு.க. இளைஞரணியினர் சாலைமறியல் - 22 பேர் கைது


குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து: ஈரோட்டில் தி.மு.க. இளைஞரணியினர் சாலைமறியல் - 22 பேர் கைது
x
தினத்தந்தி 13 Dec 2019 10:30 PM GMT (Updated: 13 Dec 2019 5:57 PM GMT)

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க. இளைஞரணியினர் 22 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு,

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும், தி.மு.க. இளைஞர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி, குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது போலீசார் அவரை கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் தி.மு.க. இளைஞர் அணியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்துக்கு தி.மு.க. இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் கே.ஈ.பிரகாஷ் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்ட நிர்வாகிகள் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். பின்னர் அவர்கள் திடீரென பெருந்துறை ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜு தலைமையிலான போலீசார் அவர்களை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றினார்கள். மொத்தம் 22 பேர் கைது செய்யப்பட்டு அருகில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். முன்னதாக தி.மு.க. இளைஞர் அணியினர் தாங்கள் கொண்டு வந்திருந்த, சட்ட திருத்த மசோதா தொடர்பான மனுவை கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த புகார் பெட்டியில் போட்டனர்.

Next Story