குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு: மதுரையில் இஸ்லாமிய அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம்


குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு: மதுரையில் இஸ்லாமிய அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Dec 2019 4:00 AM IST (Updated: 22 Dec 2019 2:28 AM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து இஸ்லாமிய அமைப்புகள் இணைந்து மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின.

மதுரை, 

குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை கோரிப்பாளையம் பகுதியில் நேற்று நடந்தது. மதுரை மாவட்ட உலமா சபை தலைவர் சாகுல்ஹமீது தலைமை தாங்கினார். மதார் மைதீன் வரவேற்று பேசினார். இதில் மதுரை மாவட்ட அனைத்து ஜமாத்துகள், இஸ்லாமிய அமைப்பு நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

மதுரை மாவட்ட உலமாசபை செயலாளர் அப்துல்அஜீஸ், அப்துல் ஜப்பார் ஆகியோர் மத்திய அரசுக்கு எதிராகவும், குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்தும் பேசினார்கள். இதில் முஸ்லிம்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அங்கு மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-

இந்திய அரசியல் சாசனத்தின் புனிதத்தை குலைக்கும் வகையில் குடியுரிமை சட்டத்தில் திருத்தத்தை நிறைவேற்றியுள்ள மத்திய பா.ஜனதா அரசை வன்மையாக கண்டிக்கிறோம். மக்களிடையே மதத்தின் பெயரால் பிளவை ஏற்படுத்தும் தனது தொடர் முயற்சிகளை பா.ஜனதா அரசு நிறுத்திக் கொள்ளாவிட்டால் இந்திய ஒருமைப்பாட்டிற்கு அது பெரும் அச்சுறுத்தலாக அமைந்து விடும் என மத்திய அரசை எச்சரிக்கிறோம்.

இந்த மசோதாவினால் ஏற்படக்கூடிய துயரமான விளைவுகளை கவனத்தில் கொண்டு உச்சநீதிமன்றம் இம்மசோதா விவகாரத்தில் நல்லதொரு தீர்ப்பை வழங்கும் என்று எதிர்்பார்க்கிறோம் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் திடீரென்று தமுக்கம் பகுதியில் மறியல் செய்ய முயன்றனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதே போல் நேற்று மாலையில் கோரிப்பாளையம் பகுதியில் கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் மாணவிகள், பெண்கள் திரண்டு மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Next Story