மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை: அமராவதி அணை நீர்மட்டம் 77 அடியை எட்டியது - விவசாயிகள் மகிழ்ச்சி


மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை: அமராவதி அணை நீர்மட்டம் 77 அடியை எட்டியது - விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 21 Dec 2019 10:40 PM GMT (Updated: 22 Dec 2019 12:35 AM GMT)

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் அமராவதி அணையின் நீர்மட்டம் 77 அடியை எட்டியது. இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தளி,

உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகளை ஆதாரமாக கொண்டு அமராவதி அணை கட்டப்பட்டுள்ளது. அதன் மூலமாக அணைக்கு மழைக்காலங்களில் நீர்வரத்து ஏற்படுகின்றது. இதை நீராதாரமாக கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்தில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

பருவகாலங்களில் ஏற்படுகின்ற நீர்வரத்தையும் அன்றைய நிலையில் அணையில் உள்ள நீர்இருப்பை கொண்டு பாசன நிலங்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதைத்தொடர்ந்து விவசாயிகள் நிலங்களை உழுது நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். தென்னை சாகுபடி பரவலாக நடைபெற்றாலும் கூட அமராவதி அணை பாசனத்தில் நெல் சாகுபடியே பிரதானமாக உள்ளது.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் மேற்கு தொடர்ச்சி மலைகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது. இதையடுத்து அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக அங்குள்ள பாம்பாறு, தேனாறு, சின்னாறு மற்றும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் அமராவதி அணைக்கு தொடர் நீர்வரத்து இருந்து வந்ததால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து முழுகொள்ளளவை நெருங்கியது. அதைத்தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் 20-ந் தேதி அமராவதி அணையில் இருந்து புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதையடுத்து மடத்துக்குளம், அமராவதி, கல்லாபுரம் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நெல் சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த சூழலில் வடகிழக்கு பருவமழையும் நல்ல முறையில் பெய்தது. அத்துடன் அவ்வப்போது குறிப்பிட்ட இடைவெளியில் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் சாரல் மழையும் அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வந்தது.

இதனால் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து ஏற்பட்டது. மேலும் பருவமழையின் காரணமாக அமராவதி அணைப்பகுதியில் வெப்பத்தின் தாக்குதல் குறைந்து விட்டது. அத்துடன் நெற்பயிர்களின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு இதமான சீதோஷ்ண நிலை நிலவுகிறது. இதனால் நெற்பயிர்கள் நல்ல முறையில் வளர்ந்து வருவதுடன் நெல்மணிகள் பால்பிடிக்கும் தருவாயில் உள்ளது. இதன் காரணமாக நெல் சாகுபடியில் எதிர்பார்த்த அளவு விளைச்சலை ஈட்டுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அமராவதி அணையின் மொத்த உயரம் 90 அடி ஆகும். நேற்றைய நிலவரப்படி அமராவதி அணையில் 77.30 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 406 கன அடி தண்ணீர் வருகிறது. அணையிலிருந்து வினாடிக்கு அமராவதி ஆற்றில் 200 கனஅடி தண்ணீரும், ராமகுளம் மற்றும் கல்லாபுரம் வாய்க்காலில் தலா 25 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.

Next Story