பெங்களூருவில் டிரைவர் கொலை வழக்கில் வாலிபரை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்


பெங்களூருவில் டிரைவர் கொலை வழக்கில் வாலிபரை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்
x
தினத்தந்தி 24 Dec 2019 10:15 PM GMT (Updated: 24 Dec 2019 7:05 PM GMT)

பெங்களூருவில் டிரைவர் கொலை வழக்கில் வாலிபரை துப்பாக்கியால் சுட்டு போலீசார் பிடித்தனர்.

பெங்களூரு, 

பெங்களூருவில் டிரைவர் கொலை வழக்கில் வாலிபரை துப்பாக்கியால் சுட்டு போலீசார் பிடித்தனர். அந்த வாலிபர், ஏட்டுவை கத்தியால் குத்திவிட்டு ஓடியதால் போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர்.

கொலை

பெங்களூரு நந்தினி லே-அவுட் போலீஸ் எல்லைக்குட்பட்ட லக்கெரே மெயின் ரோட்டில் கடந்த 10-ந் தேதி இரவு காரில் இருந்து இறங்கிய டிரைவர் ரகு(வயது 28) என்பவர் மர்மநபர்களால் ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து நந்தினி லே-அவுட் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையை தொடங்கினர்.

இந்த விசாரணையின் அடிப்படையில் நரசிம்மா என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின்போது லக்கெரேயில் வசித்து வரும் பாபு(24) மற்றும் பிரபாகரன் ஆகியோருக்கு ரகு கொலையில் தொடர்பு இருப்பதும், 2 பேரும் தலைமறைவாக இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து. 2 பேரையும் கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர்.

ஏட்டுவுக்கு கத்திக்குத்து

இந்த நிலையில் பெங்களூரு ஜாலஹள்ளி போலீஸ் எல்லைக்குட்பட்ட எச்.எம்.டி. பஸ் நிலையத்தில் பாபு நின்று கொண்டு இருப்பதாக மகாலட்சுமி லே-அவுட் போலீசாருக்கு நேற்று அதிகாலையில் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடரமணா மற்றும் ஏட்டு ஆனந்தராஜூ ஆகியோர் அவரை கைது செய்ய சென்றனர்.

போலீசாரை பார்த்தவுடன் பாபு ஓட்டம் பிடித்தார். அவரை விரட்டிச் சென்று ஏட்டு ஆனந்தராஜூ பிடிக்க முயன்றார். கோபம் அடைந்த பாபு, அவரை கத்தியால் குத்திவிட்டு தொடர்ந்து ஓடினார். இதனால் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடரமணா வானத்தை நோக்கி துப்பாக்கியால் ஒருமுறை சுட்டு சரண் அடையும்படி பாபுவுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

துப்பாக்கிச்சூடு

ஆனால் அதை கேட்காமல் பாபு தொடர்ந்து ஓடியதோடு, சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடரமணாவையும் தாக்க முயன்றார். இதனால் பாதுகாப்பு கருதி சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடரமணா தனது துப்பாக்கியை எடுத்து பாபுவை நோக்கி சுட்டார். இதில் பாபுவின் 2 கால்களிலும் குண்டு துளைத்தது. இதையடுத்து பாபு சுருண்டு விழுந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

குண்டு காயம் அடைந்த பாபு மற்றும் கத்திக்குத்து காயம் அடைந்த போலீஸ் ஏட்டு ஆனந்தராஜூ ஆகியோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள பிரபாகரனை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Next Story