திருத்துறைப்பூண்டியில் லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதல்; அய்யப்ப பக்தர் பலி போலீசார் விசாரணை


திருத்துறைப்பூண்டியில் லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதல்; அய்யப்ப பக்தர் பலி போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 4 Jan 2020 11:00 PM GMT (Updated: 4 Jan 2020 6:42 PM GMT)

திருத்துறைப்பூண்டியில் லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதி அய்யப்ப பக்தர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தேளிக்குளம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் வீரையன். இவரது மகன் மகேஸ்வரன்(வயது18). இவர் சமையல்கலை படிப்பை முடித்துவிட்டு கொடைக்கானலில் ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். மேலும் இவர் அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு வந்தார்.

இந்தநிலையில் நேற்று மகேஸ்வரன் சபரிமலைக்கு செல்வதை தனது உறவினர் வீட்டில் சொல்வதற்காக பாண்டிக்கு மோட்டார்சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது தூத்துக்குடி-சென்னை கிழக்குகடற்கரை சாலையில் நெடும்பலம் அருகே சென்றபோது பட்டுக்கோட்டையில் இருந்து மணல் ஏற்றி வந்த லாரி மீது மகேஸ்வரனின் மோட்டார்சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது.

விசாரணை

இதில் பலத்த காயமடைந்த அவரை திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி, இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து லாரியை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story