வளர்ப்பு மகன் இறந்த தினத்தில் கணவன்-மனைவி தற்கொலை முயற்சி


வளர்ப்பு மகன் இறந்த தினத்தில் கணவன்-மனைவி தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 6 Jan 2020 10:15 PM GMT (Updated: 6 Jan 2020 5:37 PM GMT)

வளர்ப்பு மகன் இறந்த தினத்தில் கணவன்-மனைவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

திரு.வி.க.

சென்னை புளியந்தோப்பு நாச்சாரம்மன் லேன் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமிபதி (வயது 60). இவருடைய மனைவி தனலட்சுமி (55). இவர்கள், தங்களுக்கு சொந்தமான வீடுகளை வாடகைக்கு விட்டு அதில் கிடைக்கும் பணத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களுக்கு குழந்தை இல்லாததால் கடந்த 16 வருடத்திற்கு முன்பு ஒரு குழந்தையை தத்தெடுத்து, சந்தானகிருஷ்ணன் என பெயரிட்டு சொந்த மகன் போல் வளர்த்து வந்தனர்.

கடந்த வருடம் ஜனவரி மாதம் 5-ந் தேதி சந்தான கிருஷ்ணன் சாலை விபத்தில் பலியாகி விட்டார். தங்கள் வளர்ப்பு மகன் இறந்த நாள்முதல் கணவன்-மனைவி இருவரும் கடும் மன உளைச்சலில் இருந்து வந்தனர்.

அவர் இறந்து நேற்று முன்தினத்துடன் ஒரு வருடம் ஆனது. இதனால் வளர்ப்பு மகன் சந்தான கிருஷ்ணனுக்கு நேற்று முன்தினம் உறவினர்கள் முன்னிலையில் திதி கொடுத்தனர். பின்னர் உறவினர்கள் அனைவரும் சென்று விட்டனர்.

வீட்டில் தனியாக இருந்த லட்சுமிபதி, தனலட்சுமி இருவரும் வீட்டில் தூங்க சென்று விட்டனர். நேற்று காலை வெகு நேரமாகியும் இருவரும் வெளியே வரவில்லை. பால் பாக்கெட்டை கூட எடுக்காமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தனர்.

அப்போது கணவன்-மனைவி இருவரும் படுக்கை அறையில் மயங்கிய நிலையில் கிடந்தனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் இருவரையும் மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், வளர்ப்பு மகன் இறந்த சோகத்தில் வீட்டில் இருந்த நீரிழிவு மாத்திரைகளை சாப்பிட்டு இருவரும் தற்கொலைக்கு முயன்று இருப்பது தெரிந்தது. லட்சுமிபதி, தனலட்சுமி இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story