கோவில்பட்டி, திருச்செந்தூரில் தொழிற்சங்கத்தினர் சாலைமறியல்; 357 பேர் கைது


கோவில்பட்டி, திருச்செந்தூரில் தொழிற்சங்கத்தினர் சாலைமறியல்; 357 பேர் கைது
x
தினத்தந்தி 8 Jan 2020 10:15 PM GMT (Updated: 8 Jan 2020 5:44 PM GMT)

கோவில்பட்டி, திருச்செந்தூரில் சாலைமறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் 357 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவில்பட்டி, 

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். வேலையில்லா திண்டாட்டத்தை போக்க வேண்டும். அனைத்து தொழிலாளர்களின் குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.21 ஆயிரம் என நிர்ணயிக்க வேண்டும். தனியார் மற்றும் அமைப்புசாரா தொழிலில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று வேலைநிறுத்த போராட்டம் நடந்தது.

இதையடுத்து கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிற்சங்கத்தினர் நேற்று காலையில் கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர். ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட துணை தலைவர் தமிழரசன், மாவட்ட செயலாளர் சேது, சி.ஐ.டி.யு. மாவட்ட துணை தலைவர் மோகன்தாஸ், மாநில குழு உறுப்பினர் கிரு‌‌ஷ்ணவேணி, மாவட்ட குழு உறுப்பினர் தெய்வேந்திரன், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் ராஜசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சாலைமறியலில் ஈடுபட்ட 33 பெண்கள் உள்பட 179 பேரை கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுதேசன், அய்யப்பன், பத்மாவதி, சுகாதேவி மற்றும் போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தத்தை முன்னிட்டு, கோவில்பட்டி தலைமை தபால் நிலையம், பி.எஸ்.என்.எல். அலுவலகம், வங்கிகள் போன்றவற்றில் பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. சில அதிகாரிகள் மட்டுமே பணிக்கு வந்தனர். இதனால் அங்கு பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. தனியார் வங்கிகள் வழக்கம்போல் செயல்பட்டன. பெரும்பாலான ஆட்டோக்கள் ஓடவில்லை.

இதேபோல் திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையம் முன்பிருந்து தொழிற்சங்கத்தினர் ஊர்வலமாக புறப்பட்டு சென்று, பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் பொன்ராஜ், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் அழகுமுத்து பாண்டியன், தொ.மு.ச. நிர்வாகி ராஜாமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் வக்கீல் முத்துகுமார், ஒன்றிய குழு உறுப்பினர் ஜெயபாண்டியன், மாவட்ட குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சாலைமறியலில் ஈடுபட்ட 36 பெண்கள் உள்பட 178 பேரை திருச்செந்தூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன் மற்றும் போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். திருச்செந்தூரில் சில வங்கிகள் திறக்கப்படவில்லை. பெரும்பாலான வங்கிகள் வழக்கம்போல் செயல்பட்டன. ஆட்டோக்கள் வழக்கம்போல் ஓடின.

இதேபோன்று விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்பு ஏ.ஐ.டி.யு.சி. தாலுகா செயலாளர் குணசீலன் தலைமையில், தொழிற்சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலைமறியலில் ஈடுபட்ட 16 பேரை விளாத்திகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை மற்றும் போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். தொழிற்சங்கத்தினரின் வேலைநிறுத்தத்தை முன்னிட்டு, எட்டயபுரத்தில் அனைத்து வங்கிகளும் பூட்டிக் கிடந்தன. ஆட்டோக்கள் ஓடவில்லை. கயத்தாறிலும் ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர்.

Next Story