மாவட்ட ஊராட்சி தலைவராக பிரிதா போட்டியின்றி தேர்வு - அ.தி.மு.க. கவுன்சிலர் வெளிநடப்பால் பரபரப்பு
தேனி மாவட்ட ஊராட்சி தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த பிரிதா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அ.தி.மு.க. கவுன்சிலர் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி,
தேனி மாவட்ட ஊராட்சியில் மொத்தம் 10 கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இதில் 7 இடங்களை அ.தி.மு.க.வும், 2 இடங்களை தி.மு.க.வும் கைப்பற்றியது. அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க. ஒரு இடத்தை கைப்பற்றியது.
இந்தநிலையில் மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத்தலைவரை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் தேனியில் உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்காக அ.தி.மு.க., தி.மு.க. கவுன்சிலர்கள், பா.ஜ.க. கவுன்சிலர் ஆகியோர் நேற்று காலையில் தேர்தல் நடக்கும் அலுவலகத்துக்கு வந்தனர்.
மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், தேர்தல் நடத்தும் அலுவலராக செயல்பட்டார். மாவட்ட ஊராட்சி அலுவலகத்திற்கு வெளியே பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட 1-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் பிரிதா வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து வேறுயாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து மாவட்ட ஊராட்சி தலைவராக பிரிதா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக, தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார்.
தேர்வு செய்யப்பட்ட பிரிதா, போடி அருகே உள்ள சில்லமரத்துப்பட்டியை சேர்ந்தவர். எம்.காம். படித்துள்ளார். பிரிதாவுக்கு கட்சியினர் மற்றும் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
இதற்கிடையே மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கு பெரியகுளம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் அன்னப்பிரகாசின் மனைவியும், 3-வது வார்டு கவுன்சிலருமான ஈஸ்வரியின் பெயர் முன்மொழியப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், நேற்று அவர் பெயர் முன்மொழியப்படவில்லை. இதனால் விரக்தி அடைந்த அ.தி.மு.க. கவுன்சிலர் ஈஸ்வரி தேர்தல் நடந்த அலுவலகத்தில் இருந்து அழுதுகொண் டே வெளிநடப்பு செய்தார். தேர்தல் முடிவு அறிவிக்கும் முன்பே அவர் வெளிநடப்பு செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னர் பிற்பகல் 3.30 மணியளவில் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் தேர்தல் நடந்தது. இதற்காக கவுன்சிலர்கள் 10 பேரும் மாவட்ட ஊராட்சி அலுவலகத்துக்கு வந்தனர். காலையில் வெளிநடப்பு செய்த அ.தி.மு.க. கவுன்சிலர் ஈஸ்வரியும் துணைத் தலைவரை தேர்வு செய்ய வந்திருந்தார்.
துணைத்தலைவர் பதவிக்கு 4-வது வார்டு பா.ஜ.க. கவுன்சிலர் ராஜபாண்டியனை அ.தி.மு.க. கவுன்சிலர்கள் முன்மொழிந்தனர். இதையடுத்து ராஜபாண்டியன் துணைத்தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து வேறுயாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.
இதையடுத்து மாவட்ட ஊராட்சி துணைத் தலைவராக ராஜபாண்டியன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
Related Tags :
Next Story